மலேசிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. டிஎபியின் மூத்த தலைவரும் கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் அக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார். ஏனென்றால் நாடாளுமன்றத்திலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது இன்னும் தொடர்கிறது. இருப்பினும், நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் உரையில் பேரரசர் ரிம2.6 பில்லியன் சம்பந்தப்பட்ட ஊழல் குறித்து விசாரணை நடத்த ஓர் அரசு ஆணையம் அமைக்க வேண்டுகோள் விடுப்பார் என்று அவர் நம்புகிறார்.
நேற்றிரவு, சரவாக்கில் நடைபெற்ற டிஎபி தேர்தல் நிதி திரட்டல் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையில் கிட் சியாங் இவ்வாறு கூறினார்.
ரிம2.6 பில்லியன் நன்கொடை மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேசனலிருந்து ரிம42 மில்லியன் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது போன்ற பெரும் ஊழல் விவகாரம் பற்றி விசாரித்து ஒரு முடிவிற்கு கொண்டு வர அரசு ஆணையம் தேவைப்படுகிறது என்றாரவர்.
மேலும், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவிடம் (பிஎசி) தேசியக் கணக்காய்வாளர் அம்பிரின் புவாங் தாக்கல் செய்துள்ள 1 எம்டிபி மீதான அவரது இறுதிக் கணக்காய்வு அறிக்கை அதிகாரப்பூர்வமான இரகசியச் சட்டத்தின் கீழ் இரகசியமானது என்று வகைசெய்யப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு நாடாளுமன்றத்தின் உன்னதத்தையும் உரிமைகளையும் அவமானப்படுத்துவதாகும் என்று கிட் சியாங் கூறினார்.
பிஎசி ஒரு நாடாளுமன்ற குழுவாகும். அதனிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை இரகசியமானது என்ற அறிவிப்பு பேரரசரின் பார்வைக்குட்பட்ட பிஎசியையும், நாடாளுமன்றத்தையும், அதன் 222 உறுப்பினர்களையும் அவமதித்து சிறுமைப்படுத்துவதாகும் என்று அவர் மேலும் கூறினார்.