“மலேசியர்களே, அந்நியத் தொழிலாளர்களிடம் அன்பு காட்டுங்கள்”, ஐஎல்ஒ

 

ILOtoMalaysiansமலேசியாவில் வேலை செய்வதற்கு சட்டப்பூர்வமாக வந்திருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் மீது பரிவும், அக்கறையும் காட்டி அவர்களுக்கு மரியாதையும் காட்டுமறு அனைத்துலக தொழிலாளர் சம்மேளம் (ஐஎல்ஒ) மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

உலகின் நமது பகுதியில், மலேசியா உட்பட, வாழும் மக்கள் அந்நியத் தொழிலாளர்கள் மீது கொண்டுள்ள எதிர்மறையான தோற்றம் குறித்து ஐஎல்ஒ ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது, ஏனென்றால் அப்போக்கு அனைவருக்கும் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அது அஞ்சுகிறது.

அந்நியத் தொழிலாளர்கள் பற்றிய மக்களின் தோற்றத்தை மாற்றவும், மலேசியாவின் பொருளாதாரத்திற்கும், சமுதாயத்திற்கும் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை மலேசியர்கள் புரிந்துகொள்ளவும் ஐஎல்ஒ ஒரு மலேசிய அமைப்பான பப்ளிக் மீடியா ஏஜென்சி (பிஎம்எ) என்ற அமைப்புடன் இணைந்து “குடிபெயர்ந்தோர் பணிகள் பரப்புரை (எம்டபுள்யுசி) 2016” என்ற பரப்புரையைத் தொடங்கியுள்ளது. இப்பரப்புரையின் கருப்பொருள் “இணைந்து பணியாற்றுதல், இணைந்து செயலாற்றுதல்: குடிபெயர்தல் நம் அனைவருக்கும் பயனளிக்கிறது” என்பதாகும்.

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 3), பெட்டாலிங் ஜெயாவில் இப்பரப்புரை சார்ந்த ஒரு கருத்துப் பரிமாற்றத்தை பிஎம்எ தமிழ் ஊடகச் செய்தியாளர்களுடன் நடத்தியது.

அந்நிகழ்ச்சியில், பிஎம்எயின் பிரதிநிதிகள் அவர்களுடையக் கருத்தை முன்வைத்தனர். அதில், மலேசியார்கள் இந்நாட்டிலுள்ள அந்நியத் தொழிலாளர்கள் குறித்த அவர்களின் மனப்பாங்கை மீண்டும் பரிசீலிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அந்நியத் தொழிலாளர்கள் மீதான மலேசியர்களின் துயரார்ந்த நிலையைக் காட்டியது.

அந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் கருத்துப்படி:

1. 38 விழுக்காட்டினர் மட்டுமே, அந்நியத் தொழிலாளர்கள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்கை ஆற்றுகின்றனர் என்று கருதுகின்றனர்;

2. 72 விழுக்காட்டினர், சட்டப்பூர்வமாக பணிபுரியும் அந்நியத் தொழிலாளர்களுக்கு உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை வழங்கக்கூடாது என்று கருதுகின்றனர்;

3. ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர், அந்நியத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், நம் நாட்டு பாரம்பரியத்திர்கும், கலாச்சாரத்திற்கும் ஊறுவிளைவிக்கின்றனர் என்றும் கருதுகின்றனர்;

4. 20 விழுக்காட்டினர் மட்டுமே, அவர்களுடைய நண்பர்களிடமும், பழக்கப்பட்டவர்களிடமும் அந்நியத் தொழிலாளர்களின் சில ஆக்கமுறையான தோற்றம் குறித்து தெரிவித்துள்ளனர்;

5.17 விழுக்காட்டினர் மட்டுமே, ஓர் அந்நியத் தொழிலாளியின் ஒருமைப்பாட்டிற்கோ, முன்னேறிச்செல்லவோ உதவியுள்ளனர்;

6. 58 விழுக்காட்டினர், அந்நியத் தொழிலாளர்களுடன் ஏதோ ஒரு விதமான நட்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், மலேசியா எப்போதுமே அந்நியத் தொழிலாளர்களின் உழைப்பால் பயனடைந்துள்ளது என்பதை பிஎம்எ பிரதிநிதிகள் வலியுறுத்தியதோடு, மலேசியர்கள் அதற்கான நன்றிக் கடனைக் கட்ட கடமைப்பட்டிருக்கின்றனர் என்றும் கூறினர்.

 

“அரசாங்கத்தின் தவறு”

 

இந்நாட்டில் மில்லியன்கணக்கான, சட்டப்பூர்வமான, சட்டவிரோத, அந்நியத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் எங்கும், எவ்விடத்திலும் இருக்கவும், எதை வேண்டுமானாலும் செய்வதற்கும் இங்கு கொண்டுவரப்பட்டனரா அல்லது கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படும் தொழில்களில் பணிபுரிய கொண்டுவரப்பட்டனரா என்று தமிழ் ஊடகச் செய்தியாளார்கள் அந்நிகழ்ச்சியில் தங்களுடைய கருத்தைத் தெரிவிக்கையில் ஒத்திசைவுடன் கேட்டனர்.

பொதுவாக, மலேசியர்கள் அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிரானவர்கள் அல்லர். அவர்களும் நாமும் சக மனிதர்கள் – “நமது சகோதரிகளும் சகோதரர்களுமாவர்”, என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

சட்டப்பூர்வமான அல்லது சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை இந்நாட்டிற்குள் வரவிடுவதற்கு அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத பல நோக்கங்கள் இருக்கின்றன. முதலாளிகளின் தேவைகளுக்காகவும், இன்னும் பல்வேறு செல்வாக்குமிக்கவர்களுக்கு சேவை செய்வதற்காகவும் அவர்கள் நாட்டிற்குள் வருவதை தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் சுட்டிக் காட்டினர்.

காலியிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு மலேசியாவுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். உள்நாட்டு தொழிலாளர்களை காலி செய்து விட்டு அவர்களின் இடத்தில் அந்நியத் தொழிலாளர்களை அற்பச் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ப்பதற்காக அல்ல என்றனர் தமிழ் ஊடகச் செய்தியாளர்கள்.

குறைந்த சம்பளம், சில சமயங்களில் அதுவுமே இல்லாமல் போகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் தங்களுடைய பிழைப்புக்கு ஏதாவது செய்ய வேண்டியதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அவர்களை ஆட்கொண்டுள்ள சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அவர்கள் பல்வேறு காரியங்களைச் செய்கின்றனர். அவை அவர்களுக்கு எதிராக மலேசியர்களின் சினத்தை தூண்டி விடுகின்றன என்று தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.

இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம்தான் என்று அவர்கள் வாதிட்டனர்.

சிங்கப்பூரில் அந்நியத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். நாம் மலேசியாவில் பார்ப்பது மற்றும் கேட்பது போன்றவற்றை சிங்கப்பூரில் பார்ப்பதும் கேட்பதும் இல்லை. அது குறித்து ஐஎல்ஒ என்ன கூறப்போகிறது என்று அவர்கள் வினவினர்.

 

ஏன் அரசாங்கத்திடம் கேட்கவில்லை?

 

அந்நியத் தொழிலாளர்களின் விவகாரங்கள் குறித்து மலேசிய மக்களிடையே விழிப்புணர்வு நிலையை ஏற்படுத்த பரப்புரை மேற்கொள்வது நல்லது, மேலும் வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த அந்நியத் தொழிலாளர்கள் குறித்த ஐஎல்ஒவின் கவலையை அது ஏன் இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குப் பொறுப்பான மலேசிய அரசாங்கத்திடம் கொண்டுசெல்லவில்லை என்று தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் கேட்டனர்.

மேலும், மலேசியா ஐஎல்ஒவில் உறுப்பியம் பெற்ற நாடு. ஐஎல்ஒ நிர்ணயிக்கும் தரங்களை முறைப்படி அமல்படுத்த வேண்டிய கடப்பாடு ILO logoஅதற்கு உண்டு. மலேசியத் தொழிலாளர் அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவரான வி. மாணிக்கவாசகம் ஐஎல்ஒ பொதுச்சபையின் தலைவராக இருந்த பெருமை மலாயாவுக்கு உண்டு என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இந்த அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் ஐஎல்ஒவால் இயற்றப்பட்ட அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது பற்றிய ஐஎல்ஒ ஒப்பந்தம் எண் 97 (ILO Convention No 97, concerning Migration for Employment (revised 1949)) அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஐஎல்ஒ உறுப்பியம் பெற்ற நாடு அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆகியவற்றுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மிக விரிவாக வரைந்துள்ளதை தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

மலேசிய அரசாங்கம் அந்த ஐஎல்ஒ ஒப்பந்தம் எண் 97 ஐ இன்று வரையில் அங்கீகரிக்காமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது என்றும் அவர்கள் கூறினர்.

சற்று எரிச்சலுடன் காணப்பட்ட தமிழ் ஊடகச் செய்தியாளர்கள், இந்தப் பரப்புரை கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பிஎம்எ ஐஎல்ஒவுக்கு தாக்கல் செய்யும் அதன் அறிக்கையில் இந்நாட்டில் அந்நியத் தொழிலாளர்கள் அடியோடு சுரண்டப்படுவது பற்றிய விவகாரத்தை ஐஎல்ஒ மலேசிய அரசாங்கக்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.