ஒருதலைப்பட்ச மத மாற்றத்திற்கு தடை, டிஎபி எம்பி மசோதா தாக்கல் செய்கிறார்

 

kulaunilateralconversionசிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்ய வகை செய்யும் சட்டத்தை தடை செய்வதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்பதலைக் கோரும் மசோதா ஒன்றை டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிநிரல் திட்டத்தில் குலா முன்மொழிந்துள்ள மசோதா 16 ஆவது இடத்தில் இருக்கிறது.

“பிரிந்து விட்ட தம்பதியினரின் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் திருமணத்தின் போது பின்பற்றிய சமயத்திலேயே இருக்க வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டில் அமைச்சரவை விடுத்திருந்த உத்தரவுக்கேற்ப சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க முறையான சட்ட அமலாக்கத்திற்கு வகை செய்வதற்காக சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்ற அவைக்குத் தெரியப்படும் தேவை உள்ளது”, என்று குலா தாக்கல் செய்துள்ள மசோதா கூறுகிறது.

தீர்க்க இயலாத நிலையில் இருக்கும் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை கையாள்வதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட மூன்றாவது சமயங்களுக்கிடையிலான குழு தேவையான சட்டத்தைத் தயாரித்து மார்ச் மாதத்தில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதற்கு ஒப்புக்கொண்டிருந்தது.

ஆனால், இது ஒரு வெறும் உறுதிமொழிதான். எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. முன்மொழியப்படும் சட்டத் திருத்தம் என்ன என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது என்றார் குலா.

இன்றுவரையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்த வரைவு ஏதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை என்று குலா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத் திருத்த மசோதாவை அனுப்பி வைப்பதில் காணப்படும் காலதாமதம் அரசாங்கம் வாக்குறிதியளித்திருந்த சட்ட சீர்திருத்தத்திற்கு ஒரு பின்னடைவாகும் என்று குலசேகரன் மேலும் கூறினார்.