நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் குடிமக்கள் பிரகடனத்தைத் தற்காத்துப் பேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் இதற்குமுன் மூன்று பிரதமர்கள் இதேபோன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
“தேர்தலுக்காகக் காத்திராமல் ஒரு பிரதமரை வெளியேறக் கேட்டுக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. துங்கு அப்துல் ரஹ்மான் காலத்திலும் உசேன் ஓன் காலத்திலும் அது நடந்தது. அப்துல்லா அஹ்மட் படாவியும் பதவி விலகி நஜிப்புக்கு இடமளித்தார்.
“அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பிஎன் அரசாங்கம் பாதிக்கப்படவில்லை”, என்றாரவர்.
அந்த வகையில், நஜிப்பை அகற்ற நினைக்கும் குடிமக்கள் பிரகடனத்தின் கோரிக்கை ஒன்றும் மாறுபட்டதல்ல.
ஒரே வேறுபாடு, அவர்கள் அரசியல் காரணங்களுக்காக பதவி விலக வேண்டும் என்று கோரப்பட்டது. நஜிப் விவகாரம் வேறு. அவரின் ஒழுக்கம், நேர்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
“இது இப்போது அம்னோ தலைமைத்துவ விவகாரமல்ல, தேசிய விவகாரமாக மாறியுள்ளது”, என முகைதின் கூறினார்.