மலேசிய ஜனநாயகம் குறித்தும் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டது குறித்தும் ஐநா கவலை தெரிவித்திருப்பது தேவையற்றது எனக் குறிப்பிட்டிருக்கும் புத்ரா ஜெயா, ஐநா கவலைகொள்ள எந்தக் காரணமுமில்லை என்றது.
வியாழக்கிழமை ஜினிவாவில் ஐநா மனித உரிமை மன்றத்தில் ஐநா மனித உரிமை உயர் ஆணையர் ஸைட் ரா’ஆட் அல் ஹுசேன் ஆண்டறிக்கை தாக்கல் செய்தபோது மலேசியாவில் ஜனநாயகத்தின் நிலை குறித்தும் அன்வார் இப்ராகிம் குறித்தும் கவலை தெரிவித்திருந்தார்.
“ஐநா உயர் ஆணையரின் கருத்து ஆதாரமற்றது என்பதையும் ஒரு தரப்பு தகவலை மட்டுமே அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் மலேசிய அரசாங்கம் வருத்தத்துடன் கூறிக்கொள்கிறது”, என்று வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அன்வார் அரசியல் கைதி அல்ல என்றும் மலேசியாவில் ஜனநாயகம் நன்றாகத்தான் உள்ளது என்றும் அது குறிப்பிட்டது.