செய்தியாளர்கள் பயங்கரவாதிகள் அல்லர்: செய்தியாளர் அமைப்புகள் சாடல்

pressபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  கேள்வி  கேட்பதற்காக  நெருங்கிச்  சென்ற   ஆஸ்திரேலிய  செய்தியாளர்கள்  இருவர்  கைது  செய்யப்பட்டதற்கு   மலேசிய  பத்திரிகையாளர்  சங்கங்கள்  கண்டனம்  தெரிவித்துள்ளன.

பிரதமரின்  பாதுகாப்பாளர்கள்  ஆஸ்திரேலிய  ஒலிபரப்புக்  கழக(ஏபிசி)ச்  செய்தியாளர்களான  லிண்டன்  பெஸ்ஸர்,  லூய்  பெஸ்ஸர்  ஆகிய  இருவரையும்  தடுத்து  நிறுத்தி  இருக்கலாம்,  கைது  செய்திருக்க  வேண்டியதில்லை  என  மலேசிய  வெளிநாட்டுச்  செய்தியாளர்  சங்கம் (எப்சிசிஎம்)  கூறியது.

“இதுவரை  செய்தியாளர்கள்  அரசாங்க  அதிகாரிகளைத்  தாக்கியதாக  செய்தி  இல்லை. அவர்கள்தான்  இவர்களைத்  தாக்கி  இருக்கிறார்கள்”, என்று  அது  கூறிற்று..

பயங்கரவாதிகளிடம்  நடந்து  கொள்வதுபோல்  போலீசார்  செய்தியாளர்களிடம்  நடந்து  கொண்டிருக்கிறார்கள்  என்று  எப்சிசிஎம்  அறிக்கை  கூறியது.

விசாரணைகளில்  செய்தியாளர்கள்  எப்போதும்  போலீசுடன்  ஒத்துழைத்து  வந்திருக்கிறார்கள்.  எனவே,  அவர்களைக்  கைது  செய்திருக்க  வேண்டிய  அவசியமில்லை  என்று  அது  தெரிவித்தது.

இதனிடையே, கெராக்கான்  மீடியா  மாரா (கெராம்), கைது  நடவடிக்கை  பத்திரிகைச்  சுதந்திரம்மீது  மேற்கொள்ளப்பட்ட  ஒரு  தாக்குதல்  என்று  கூறியது.

“ஒரு  அரசாங்க  அதிகாரி,  இங்கே  பிரதமரே,  முக்கியமான  விவகாரங்கள்  பற்றிய  கேள்விகளுக்குப்  பதிலளிக்க  முன்வந்தால்  இப்படிப்பட்ட  சம்பவத்தைத்  தவிர்த்திருக்கலாம்”,  என்று  தெரிவித்தது..

நஜிப்  பதவி  ஏற்றது  முதல்  செய்தியாளர்  கூட்டமே  நடத்தியதில்லை  என்று  கூறிய  கெராம்  அப்படியே  நடத்தினாலும்  எல்லா  ஊடகங்களும்  அதில்  கலந்துகொள்ள  அனுமதிக்கப்படுவதில்லை  என்று   குறிப்பிட்டது.