ஹிண்ட்ராப் மீண்டும் நஜிப்புக்கு அடிமை என்பதில் உண்மையில்லை – வேதமூர்த்தி

வேதாநேற்று, ”பதிவு பெற்ற ஹிண்ட்ராப் இயக்கம் மீண்டும் நஜிப்புக்கு அடிமையானது!” என்ற தலைப்பில் வெளியான செய்தியின் சார்பாக தொடர்பு கொண்ட பொ. வேதமூர்த்தி, அந்தச்செய்தி அவதூறானது எனச்சுட்டிக்காட்டினார். இது சார்பாக தாம் அவதூறு வழக்கு ஒன்றை தொடுக்கப்போவதாகவும் கூறினார்.

அந்தச்செய்தியில் எவை அவதூறானவை என்பதைச் சுட்டிக்காட்ட மறுத்த அவர், தான் பிரதமர் அவர்கள் வழங்கிய பதவியை உதறி விட்டு வந்த நிலையில் சமூகத்தின் மீதுள்ள பற்றும் வேட்கையும் எப்போதும் கீழ்நிலைக்கு போகாது என்றார்.

செம்பருத்தி வெளியிடும் செய்தியில் முரண்படுகள் இருப்பது இயல்பு. ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும் என்பதுதான் அதன் கடப்பாடு. அவ்வகையில் அந்தச்செய்தியில் உள்ள தவறானவற்றை சீராக்க கருத்துக்களை கேட்டபோது, மாற்றுக்கருத்தை தர மறுத்து விட்டார் வேதமூர்த்தி.

செம்பருத்தி அவதூறான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து வருகிறது. ஆனால், சமூகப் போரட்டம் சார்பான வகையில் அவதூறுக்கும் – சமூக நீதி கோரும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் அலசிப்பார்க்கும் ஆர்வம் செம்பருத்திக்கு எப்போதுமே இருந்து வருகிறது. – ஆசிரியர்.