“சாப் தீகா கூச்சிங்” சாராயம் பாருங்கள்: எந்த அமைச்சும் நடவடிக்கை எடுக்கவில்லை, மணிவண்ணன்

 

LiquortoParliamentநாட்டில் மிக மலிவான சாராயம் மிகச் சுலபமாக கிடைப்பதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் சாராய போத்தல்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தார்.

ஆறு சாராயப் போத்தல்களைக் காட்டிய அவர், தாம் இவ்வாறு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், அதற்கான காரணம் இச்சமூகப் பிரச்சனை குறித்து ஏழு அமைச்சுகள் எதுவுமே செய்யாமல் இருந்ததுதான் என்றார்.

“நான் புகைப்பது இல்லை, மது அருந்துவதில்லை. ஆனால் நான் இவற்றை கொண்டு வந்ததற்கான காரணம் இவற்றை வாங்குவது எவ்வளவு சுலபமானது என்பதைக் காட்டுவதற்காகும்”, என்று மக்களவையில் பேரரசரின் உரை மீதான விவாதத்தின் போது மணிவண்ணன் கூறினார்.

பின்னர், போத்தல்களை ஒன்வொன்றாகக் காட்டிய அவர், (அவை) பல வண்ணங்களிலும், அடையாளக்குறிகளிலும் வருகின்றன – சாப் தீகா கூச்சிங், சாப் காபாக்.”

இதைக் கண்ட மக்களைவைத் துணைத் தலைவர் “ஏராளமான போத்தல்கள், திறக்க வேண்டாம்”, என்று கூறினார்.

தாம் இந்த போத்தல்களைக் கொண்டு வந்தது அவற்றை சுகாதார அமைச்சிடம் கொடுத்து ஆய்வு செய்ய வைப்பதற்காக என்று அவர் மேலும் கூறினார்.

இச்சாராயம் எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த அறிக்கை அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தமக்கு தேவைப்படுகிறது என்றாரவர்.

விவாத்தின் போது பேசிய மணிவண்ணன், “நான் இந்தப் பிரச்சனையை கடந்த ஆண்டு நவம்பர் 26 இல் எழுப்பினேன். சாராயன விற்பனை கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் மிகப் பரந்த அளவில் நடக்கிறது என்றும், மாணவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற எனது கவலையைத் தெரிவித்தேன்”, என்றார்.

நிலைமை மிக மோசமாகி விட்டது. இளைஞர்கள் வீடுகள் அமைந்துள்ள இடங்களிலும், பொது இடங்களிலும் பகிரங்கமாகக் குடிக்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

 

ஏழு அமைச்சுகள் எதுவும் செய்யவில்லை

 

இந்த விவகாரம் குறித்து தாம் ஏழு அமைச்சுகளிடம், அவற்றில் சுகாதாரம், கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு, உள்துறை, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு போன்ற அமைச்சுகள் அடங்கும், வலியுறுத்தியிருந்ததாகவும், “ஆனால், அரசாங்கத்திடமிருந்து நான் எவ்வித நடவடிக்கையையும் காணவில்லை”, என்று மணிவண்ணன் சாடினார்.