‘பிரதமருக்கு புதிதாக ஒரு இபான் மனைவி’ ஜோக்குக்காக மன்னிப்பு கேட்டார் அடினான்

adenanசரவாக்  முதலமைச்சர்  அடினான்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  புதிதாக  ஒரு  இபான்  மனைவியை  மணம்  செய்து  செய்துகொள்ளலாம்  என்று  வேடிக்கையாகக்  குறிப்பிட்டது   அம்மாநில  பூர்வகுடி  மக்களுக்குப்  பிடிக்கவில்லை,  ஆத்திரமடைந்தார்கள்.  அதனால்  அடினான்  அவர்களிடம்  மன்னிப்பு  கேட்டார்.

“பிரதமர்கூட  அதைக்  கேட்டுச்  சிரித்தார். அது  ஒரு  ஜோக்  என்பது  அவருக்குத் தெரியும்.

“ஆனால்,  சிலருக்கு  அது  பிடிக்கவில்லை.  அதற்காக   மன்னிப்பு  கேட்டுக்  கொள்கிறேன்”, என்று  அடினான்  கூறியதாக  த  ஸ்டார்  ஆன்லைன்  தெரிவித்தது.

கடந்த  சனிக்கிழலை  நஜிப்  சரவாக்  சென்றிருந்தபோது  அடினார்  அவ்வாறு  கூறினார்.

நஜிப்  அடிக்கடி  அம்மாநிலத்துக்கு  வருகை  புரிவதற்கு  நன்றி  தெரிவித்த  அடினான்,  ஆனாலும்  பிரதமருக்கு    இன்னமும்  இபான்  மொழி  பேச  வரவில்லை  என்பதையும்  சுட்டிக்காட்டினார்.

நஜிப் விரும்பினால்  ஒரு  இபான்  பெண்னைக்  கண்டுபிடித்து  அவருக்கு மனைவியாக்க  தயார்  என்றும்  அடினான்  சொன்னார். கூடவே,  விளையாட்டுக்காக  அப்படிச்  சொன்னதாகவும்  குறிப்பிட்டார்.

ஆனால்,  சிலர்  அதை  வேடிக்கையாகக்  கருதவில்லை.

அடினான்  அப்படிக்  கூறியதை  சரவாக்  டாயாக்  பட்டதாரிகள்  சங்கம் சாடியது.

“ஏன்  இபான்  பெண்  என்று  சொல்ல  வேண்டும்? மற்றவர்களைச் சொல்லக்கூடாதா? பொருள்கள்போன்று  எடுத்துக்  கொடுக்கும்  அளவுக்கு  இபான்  பெண்கள்  மட்டமானவர்களா?”, என்று  அச்சங்கத்தின்  துணைத்  தலைவர்  நோயல்  லில்லி  மோர்ஸ்  இன்று  ஓர்  அறிக்கையில்  விளாசி  இருந்தார்.