ஹிண்ட்ராப்-க்கு, மீண்டும் துணையமைச்சர் பதவியா?

kalaichelvanபுரிந்துணர்வு ஒப்பந்தமும் துணையமைச்சர் பதவியும் மீண்டும் ஹிண்ட்ராப் அமைப்புக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதாக லண்டன் வழி நேற்று கிடைக்கப்பெற்ற ஒரு குறுஞ்செய்தியை ஹிண்ட்ராப் அமைப்பின் பினாங்கு மாநிலத் தலைவர் க. கலைச்செல்வன் வெளியிட்டார்.

இந்தக் குறுஞ்செய்தி லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட எண்களைக் கொண்டுள்ளது. இதை அனுப்பியவர் இதற்கு முன்பும் ஹிண்ட்ராப் இயக்கத்தினருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளதாக கூறிய கலைச்செல்வன், இவரின் பெயரைக்குறிப்பிட விரும்வில்லை. இவர் லண்டனில் பணிபுரியும் ஒரு பிரபலமான வழக்கறிஞர் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது இவரும் உடன் இருந்ததாகக் கூறினார்.

செம்பருத்திக்கு அவர் அனுப்பிய அந்த குறுஞ்செய்தியின் மொழியாக்கம் வருமாறு.

sms london2 “ஜி – உங்களுக்கு நல்லாசிகள். பிரதமருக்கு ஆதரவு வேண்டும் என்ற முன்மொழிதலுடன் ஓர் அதிகாரப்பூர்வ தொடர்பை பெற்றேன். அதாவது ஹிண்ட்ராப் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால், எம்-ஒ-யும் து.அமைச்சர் பதவியும் மீண்டும் தரப்படும். இது ஹிண்ட்ராப்க்கு ஒரு மறுவாழ்வு. ஹிண்ட்ராப்பில் அதிகாரப்பூர்வ தகுதி கொண்டவராக கருதும் யாரும் முன்வரலாம். மற்றதை நான் செய்கிறேன். வசதியற்ற இந்தியர்களுக்கு உதவ இது ஒரு லாட்டரி. தகுதியுள்ளவர்கள் நேரிடையாக குறுஞ்செய்தி அனுப்பவும். மற்றவர்கள் “அடிமைத்தன சேவையை” அவர்களின் தலைமைதுவத்திற்கு தொடரலாம்.”

ஜி- என்பவர் ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆலோசகர் கணேசன் என்றும், இதே  செய்தியை ஹிண்ட்ராப் இயக்கத்தில் உள்ள பிறரும் பெற்றுள்ளதாகவும் கலைச்செல்வன் கூறினார். இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்ற கேள்விக்கு, “தற்போதுள்ள பிரதமரின் சூழலையும், ஹிண்ட்ராப் இயக்கம் மேற்கொண்ட தலைமைத்துவத்திற்கான தேர்தலையும் வைத்துப்பார்க்கையில், பதிவு பெற்ற ஹிண்ட்ராப் அமைப்பு மீண்டும் நஜிப்புடன் இணையும் சாத்தியத்தை மறுக்க இயலாது” என்றார்.

மேலும் கூறுகையில், இந்திய மக்களின் பிரநிதியாக ஹிண்ட்ராப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதை அரசாங்கம் அமுலாக்கத் தவறியது. மீண்டும் வாய்ப்புத் தருகிறோம். மன்னிப்பு கேளுங்கள் என்றால் அது விலைபேசுவது ஆகும். போரட்டமாக உருவான ஹிண்ட் ராப் இயக்கத்தின் பின்னணியில் அதே உணர்வுடன் இன்னமும் தன்மானமுள்ள பலர் உள்ளனர் என்றார் கலை.