பெர்த்தில் மலேசியா மண்டபத்தில் நஜிப்பைக் ‘கோமாளியாகக் காண்பிக்கும்’ ஒட்டுப்படங்கள்

perthபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  “கோமாளி  முக”த்துடன்  சித்திரிக்கும் படங்கள்  ஆஸ்திரேலியாவின்  பெர்த்  நகரிலுள்ள  மலேசியா  மண்டபத்தில்  ஒட்டப்பட்டிருந்தன.

சமூக  வலைத்தளங்களில்   வலம்  வந்து  கொண்டிருக்கும்  படங்கள், மலேசியா  மண்டபத்தின்  முன்வாயிலிலும்  வெளிப்புறச்  சுவர்களிலும்  நஜிப்பின்  கேலிச்சித்திரங்கள்  ஒட்டப்பட்டிருப்பதைக்  காட்டுகின்றன.

நஜிப்பைக்  கோமாளி  முகத்துடன்  முதன்முதலாக  இணையத்தில்  பதிவிட்டிருந்தவர்  சமூக ஆர்வலர்  பாஹ்மி  ரேஸா. அது  குறித்து  போலீஸ்  விசாரணை  இன்னமும்  நடந்து  வருகிறது.

அவரது  கேலிச்சித்திரம்தான்  நகலெடுக்கப்பட்டு  பெர்த்  மலேசியா  மண்டபத்திலும்  ஒட்டப்பட்டுள்ளது.

அது  குறித்து முகநூலில்  கருத்துரைத்த  பாஹ்மி, “கிளர்ச்சி  ஆஸ்திரேலியாவுக்கும்  பரவியுள்ளது”  என்றார்.

“சரியான  வழிமுறைகளில்  எதிர்ப்புத் தெரிவிக்கும்போது  கண்டுகொள்வதில்லை  அல்லது  வெளியில்  தெரியாது  தடுக்கப்படுகிறது.

“அவர்கள்  ஒடுக்கப்படுகிறார்கள்.  அவர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படுகிறது.  அதனால்  இளைஞர்கள் அதிகாரத்தில்  உள்ளவர்களுக்குச்  செய்திகளை  உணர்த்த  வேறு  வழிகளை  நாடுகிறார்கள்”,  என்றாரவர்.