பாஸ் ஈக்காத்தானுடன் சேர்ந்து மூன்றாவது கூட்டணியை அமைக்கும்

newபாஸ், ஈக்காத்தான்  பங்சா  மலேசியா (ஈக்காத்தான்)  கட்சியுடன்  கைகோத்து  புதிய  அரசியல்  கூட்டணியை  அமைக்கப்போவதாக  அறிவித்துள்ளது.

இன்று  பாஸ்  தலைமையகத்தில்  நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில்  அது  அறிவிக்கப்பட்டது. அக்கூட்டத்தில்  ஈக்காத்தான்   தலைவரும்  முன்னாள்  சுற்றுலா  அமைச்சருமான   அப்துல்  காடிர்  ஷேக்  பாட்சிர்,  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்,  அதன்  தலைமைச்  செயலாளர்   தகியுடின்  ஹசான்,  உதவித்  தலைவர்  இட்ரிஸ்  அஹமட்,  தேர்தல்  இயக்குனர்  முஸ்தபா  அலி  முதலானோர்  கலந்து  கொண்டனர்.

இதற்குமுன்  தகியுடின்,  பாஸ்  பல்லின  அமைப்பு  ஒன்றுடன்  இணைந்து  மூன்றாவது  கூட்டணியை  அமைக்கப்போவதாகக்  கூறி  இருந்தார்.

ஈக்காத்தான்  2012  அமைக்கப்பட்ட  கட்சி. ஆனால்,  2015-இல்தான்  அது  பதிவு  செய்யப்பட்டது.  அதுவும்  முன்னாள்  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினரான  காடிர்,  சங்கப்  பதிவதிகாரிமீது   வழக்குத்  தொடுத்த  பின்னர்தான்  அது  பதிவு  செய்யப்பட்டது.

பாஸ்,  பக்கத்தான்  ஹராபானில்  சேர்த்துக்கொள்ளப்படாததை  அடுத்து  ஈக்காத்தானுடன்  சேர்ந்து  இப்புதிய  கூட்டணியை  அமைக்கிறது.

பக்கத்தான்  ஹராபானில்  பிகேஆர்,  டிஏபி,  பாஸிலிருந்து  பிரிந்து  சென்ற  பார்டி  அமானா  நெகாரா(அமானா)  ஆகியவை  இடம்பெற்றுள்ளன.