குவான் எங் ஊழல் புரிந்தார் எனக் கூறப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் அமளி

havocலிம்  குவான்  எங் (டிஏபி-பாகான்)  ஊழல்  புரிந்தார்  என்று  கூறப்பட்டதை  அடுத்து  மக்களவையில்  ஒரே  கூச்சலும்  குழப்பமும்  நிலவியது.

லிம்  முன்பு  வாடகைக்குக்  குடி இருந்த  வீட்டை  இப்போது  மிகக்  குறைந்த  விலைக்கு  வாங்கி  இருப்பதாக  ஷாபுடின்  யஹ்யா(பிஎன் -தாசெக்  குளுகோர்)  கூறினார்.

ஜார்ஜ்டவுனில்  உள்ள  அந்த  வீட்டின்  விலை  2008-இல்  ரிம2.5 மில்லியன்  என்றும்  இப்போது  விரிவாக  புதுப்பிக்கப்பட்ட  அவ்வீட்டை  லிம்  ரிம2.8 மில்லியனுக்கு  வாங்கி  இருக்கிறார்  என்றும்  கூறினார்.

இது  அந்த  வீட்டின்  உண்மையான  விலையைப்  பிரதிபலிக்கவில்லை  என   ஷாபுடின் கூறிக்கொண்டார்.

மேலும், அந்த  வீடு  குறைவான விலைக்குக்  கொடுக்கப்பட்டதற்கும்  தாமான்  மங்கிசில்  தனியார்  மேம்பாட்டாளர்  ஒருவருக்கு  இரண்டு  துண்டு  நிலங்கள்  விற்கப்பட்டதற்கும்  தொடர்பிருப்பதாகவும்  அவர்  குறிப்பிட்டார். தாமான்  மங்கிஸ்  நிலம்  குறைந்த–விலை  வீடுகள்  கட்டுவதற்காக  ஒதுக்கப்பட்ட  நிலம்  என்றாரவர்.

டிஏபி  தலைமைச்  செயலாளருமான  லிம்  தன்னைத்  தற்காத்துக்கொள்ள  நாடாளுமன்றத்தில்  இல்லை  என்று  கூறி  டிஏபி  எம்பிகள்  அக்குற்றச்சாட்டுக்கு  எதிர்ப்புத்  தெரிவித்தார்கள்.

அவ்விவகாரம்,  மக்களவையில்  விவாதிக்கப்பட  வேண்டியதல்ல  பினாங்கு  சட்டமன்றத்தில்  விவாதிக்கப்பட  வேண்டியது  என்றும்  அவர்கள்  வாதிட்டனர்.

அவர்களின்  வாதத்தை  மக்களவைத்  தலைவர்  இஸ்மாயில்  முகம்மட்  சைட்  ஏற்கவில்லை.  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவையில்  இல்லாதபோதுகூட  அவர்மீது  குற்றம்சொல்ல  எதிரணியினர்  அனுமதிக்கப்பட்டதை  அவர்  சுட்டிக்காட்டினார்.