எம்எச்370-இன் உடைந்த பகுதி என்று நம்பப்படும் ஒன்றை ஒப்படைக்க தென்னாப்ரிக்கர் காத்திருக்கிறார்

mh37035-வயது  தென்னாப்ரிக்கர்  ஒருவர்,  காணாமல்போன  எம்எச்370  விமானத்துக்குச்  சொந்தமானது  என்று  நம்பப்படும்  உடைந்த  பாகங்களில்  ஒன்றை  ஒப்படைப்பதற்காக  வைத்துக்  கொண்டிருக்கிறார். தென்னாப்ரிக்காவின்  தெற்குக்  கடலோரமாக  அவர்  அதைக்  கண்டெடுத்தாராம்.

நெலியஸ்  குருகர்  என்னும்  தொல்பொருள்  ஆராய்ச்சியாளர்  மொசல்  வளைகுடா  பகுதியில்  கடலோரமாக  நடந்து  கொண்டிருந்தபோது  “விநோதமாகக்  காணப்பட்ட” ஒரு  பொருளைக்  கண்டார்.

“அதைக்  கண்டதும்  அது  வழக்கமாக  கடலில்  அடித்துவரப்படும்  குப்பை அல்ல  என்பதை  அறிந்தேன்.

“வானூர்திகளில்  எனக்கு  ஆர்வம்  உண்டு. அதிலிருந்த  முத்திரையைப்  பல  விமான  இயந்திரங்களில்  பார்த்திருக்கிறேன்”, என்றாரவர்.

குருகர்  அதைப்  படமெடுத்து  காணாமல்போன  எம்எச்370  விமானத்தைத்  தேடும்பணியை  முன்னின்று  நடத்தும்  ஆஸ்திரேலிய  போக்குவரத்துப்  பிரிவுக்கு  மின்னஞ்சலில்  அனுப்பி  வைத்தார்.

ஆஸ்திரேலிய  அதிகாரிகள்  நேரில்  வந்து  அதைப்  பெற்றுக்கொள்வதாகக்  கூறி  அப்பொருளைப்  பாதுகாப்பாக  வைத்திருக்குமாறு  கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.