மார்ச் 27 மலேசியாவை காப்பாற்றுவோம் கூட்டத்தில் அதிகமான அம்னோ உறுப்பினர்கள் கலந்துகொள்வர், ஸைட் கூறுகிறார்

 

Zaidstopbickeringஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஷா அலாம் கொன்வென்சன் சென்டரில் நடைபெறவிருக்கும் மலேசியாவை காப்பாற்றுவோம் கூட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான அம்னோ உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்று அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் இன்று கூறினார்.

அதிகமான அம்னோ உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர் என்று மலேசியாகினியிடம் கூறிய ஸைட், தாம் அம்மண்டபத்தில் இடமிருக்கிற அளவுக்கு அழைப்புகள் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் அம்னோ உறுப்பினர்களில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினும், கெடா மாநில முன்னாள் மந்திரிபுசார் முக்ரீஸ் ஆகியோரும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.

அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இக்கூட்டம் ஈஸ்டர் பெருநாளாக இருப்பதால் பிற்பகல் மணி 1.00 க்கு தொடங்கி மாலை மணி 6.00 வரையில் நடபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஸைட் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் உரையாற்றிய 19 பேரும் பங்கேற்கும் ஒரு செய்தியாளர் கூட்டம் நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.

அக்கூட்டத்தில் பேசவிருப்பவர்களில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட், முகைதின் யாசின், முக்ரீஸ் மகாதீர், டிஎபி யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அமனா தலைவர் முகமட் சாபு, முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் எஸ். முருகேசன், வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா மற்றும் பெர்சேயின் தலைவர் மரியா சின் ஆகியோரும் அடங்குவர்.

தொடக்கத்தில் 1000 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கூட்டம் நடக்கும் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 1,500 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பதாக ஸைட் கூறினார்.