சிஎம்: எனக்கு வீடு விற்றவர் வெளியில் வந்து விட்டார்; ரிம2.6பி. கொடையாளர் எப்போது வெளிவருவார்?

donorபினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தாம் ஒரு பங்களா வீட்டைச் சந்தை விலைக்கும் குறைவான விலைக்கு வாங்கியதை ஊழல் என்று முத்திரை குத்த முனைவோரைக் கடுமையாக சாடினார்.

தாமோ, தமக்கு ரிம2.8 மில்லியனுக்கு வீட்டை விற்றவரோ ஒளிப்பதற்கு ஏதுமில்லை என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் கூறினார்.

அதன்பின்னர் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ரிம2.6 பில்லியன் நன்கொடை வழங்கிய சவூதி அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் யார் என்பது தெரியாமலேயே இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

“எனக்கு வீட்டை விற்றவர் தானே முன்வந்து தன்னை யார் என்று காண்பித்துக் கொண்டார். ரிம2.6 பில்லியன் நன்கொடை அளித்தவர் இன்னும் வெளிவரவில்லையே.

“நான் எல்லா நிலைகளிலும் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறேன். பிஎன் தலைவர்கள் அப்படிச் செய்வதில்லை”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் லிம் கூறினார்.