தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அவசரம் காட்டியது ஏன்?

hastyஇன்று  காலை  மூவர்  தூக்கிலிடப்பட்டதை,  அதுவும்  அரசாங்கம்  கட்டாய  மரண  தண்டனையை  ஒழிப்பது  பற்றி   விவாதித்துக்கொண்டிருக்கும்போது  அவர்களைத்  தூக்கிலிட்ட  செயலை  அம்னெஸ்டி  இண்டர்நேசனல்   கண்டித்துள்ளது.

“மூவர்  தூக்கிலிடப்பட்டது  ஒரு  கொடூரச்  செயல்.  அதற்காக  மலேசியா  வெட்கப்பட  வேண்டும்.

“அதுவும்  மலேசிய  அரசாங்கம்  மரண   தண்டனை  ஒழிப்புப்  பற்றித்  தீவிரமாக  விவாதித்துக்  கொண்டிருக்கும்போது  அரசு  அனுமதிபெற்ற  அக்கொலைகள்  நிகழ்ந்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது,  வருத்தமளிக்கிறது”, என  அம்னெஸ்டி  இண்டர்நேசனலின்   தென்கிழக்காசியா,  பசிபிக்  வட்டார  பரப்புரை  இயக்குனர்  ஜோசப்  பெனடிக்ட்   இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

தூக்கிலிடப்பட்ட  கைதிகளுக்கோ  அவர்களின்  குடும்பத்தினருக்கோ  அவர்கள்  ஆகக்  கடைசியாக  செய்த  மேல்முறையீடுகள்  நிராகரிக்கப்பட்டது  தெரியாது. திடீரென  தூக்குத்தண்டனை  நிறைவேற்றம்  பற்றித்  தெரிவிக்கப்பட்டதால்  குடும்பத்தினர்  அவர்களைச்  சந்திப்பதற்குக்கூட  போதுமான  அவகாசம்  இல்லாமல்  போய்விட்டது  என்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

இன்று காலை  மணி  5.30க்கு,   குணசேகர்  பிச்சைமுத்துவும்  அவரின்  சகோதரர்கள்  ராமேஷ்  ஜெயகுமார்,  சசிவர்ணம்  ஜெயகுமார்  ஆகியோரும்  தைப்பிங்  சிறையில்   தூக்கிலிடப்பட்டனர்.