ரபிஸி திங்கள்கிழமை இரகசிய ஆவணங்களை வெளியிடுவார்

osaபிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி,  இரகசிய  காப்புச்  சட்ட(ஓஎஸ்ஏ)த்தால்  பாதுகாக்கப்படும்  ஆவணங்கள்  சிலவற்றைத்  திங்கள்கிழமை  வெளியிடுவார். அப்படி  வெளியிடுவது  அதிகாரிகளுடன்  நேரடியாக  மோதிக்கொள்வதற்கு  ஒப்பாகலாம்.  அதற்காக  ஈராண்டுச்  சிறையும்  விதிக்கப்படலாம்.

ஆயிரக்கணக்கான  முன்னாள்  படைவீரர்களுக்கு  அவர்களின்  பணிக்கொடை  (gratuity) கிடைக்காமலிருப்பதற்கு  1எம்டிபி-தான்  காரணம்  என்று  கூறும்  ரபிஸி,  தம்  கூற்றுக்கு  அந்த  இரகசிய  ஆவணங்களே  ஆதாரங்கள்  என்கிறார்.

லெம்பாகா  தாபோங்  அங்காத்தான்  தெந்திரா(எல்டிஏடி)  பணிக்கொடை  கொடுபடாமல்  இருப்பதற்கான  உண்மையான  காரணத்தைத்  தெரிவிக்க  வேண்டும்  இல்லையேல்  அந்த  ஆவணங்களை  வெளியிடப்  போவதாக  கம்போங்  பாண்டான் எம்பியான  ரபிஸி  கடந்த  சில  நாள்களாகவே    மிரட்டிக்  கொண்டிருக்கிறார்.

“அவற்றை (இரகசிய  ஆவணங்கள்)  வெளியிட்டால்தான்  அவர்களுக்குப்  பணிக்கொடை  கிடைக்கும்  என்றால்  அதற்காகவே  அதைச்  செய்யலாம். ஆயிரக்கணக்கான  குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.  அவர்கள்  ஏழைகள்.  வெளியில்  சொல்லாமலேயே துன்பத்தை  அனுபவிக்கிறார்கள்”, என்றாரவர்.

இரகசிய  ஆவணங்களை  வெளியிடுவதால்  ஈராண்டுச்  சிறை  செல்ல  வேண்டி  நேரலாம். ஆனால்  அதைப்  பற்றி  அவர்  கவலைப்படவில்லை.