அச்சமின்றி கையொப்பமிடுங்கள்

 

Peoplescongresssignwithoutfearபின் விளைவுகள் பற்றிய அச்சம் ஏதுமின்றி மக்கள் குடிமக்கள் பிரகடனத்தில் கையொப்பமிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.

உண்மையான மக்கள் இயக்கத்திற்கான தேவை இப்போது இருக்கிறது. குடிமக்கள் பிரகடனத்திற்கு இப்போது தேவைப்படுவது தைரியமிக்க மக்களை ஒன்றுகூட்டி அதில் கையொப்பமிடுவதுதான் என்றாரவர்.

மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்பதை ஒப்புக்கொண்ட மகாதீர் இதற்கான காரணம் தற்போதைய அரசாங்கம் மக்களை அச்சுறுத்துகிறது என்றார்.

“ஆக, மக்கள் இந்த அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர். பிரகடனத்தில் கையொப்பமிடுவதற்கு மக்களைத் திரட்டுவது சிரமமாக இருக்கிறது”, என்று நேற்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஒரு மில்லியன் மக்கள் கைது செய்யப்படுவது சாத்தியமில்லை என்றாரவர்.

இவ்வாண்டின் இறுதிக்குள் ஒரு மில்லியன் கையொப்பங்கள் பெறப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதற்கு முன்னதாகவே அந்த இலக்கை அடைய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.