டாக்டர் மகாதிரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்தில், ஏற்கனவே தட்டுத் தடுமாறி நடைபோடும் தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் பலியாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
முன்னாள் பிரதமரால் உருவாக்கப்பட்டது புரோட்டோன். இன்னும் அவர்தான் அதற்குத் தலைவராக இருக்கிறார். இப்போது அந்நிறுவனம் சிக்கலில் சிக்கிக் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
அதன் கடன்சுமை பெருகிக்கொண்டே வருகிறது. விற்பனை குறைந்துள்ளது. தனக்குப் பொருள் விற்பவர்களுக்குக்கூட பணம் கொடுக்கத் தடுமாறுகிறது. பிரச்னைகளைத் தீர்க்க அது அரசாங்கத்திடமிருந்து ரிம1.47 பில்லியன் மான்யம் கேட்டுள்ளது.
மகாதிர்- நஜிப் சச்சரவால் மான்யம் தடைப்படலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளதாக த ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. .
அது கிடைக்காத நிலையில் ஊழியர்கள் வேலை இழக்கலாம், அதற்குப் பொருள் விற்பனை செய்தவர்களுக்குப் பணம் கொடுபடாமல் போகலாம் என அச் செய்தி கூறிற்று.
“அவர்களிடமும் (ஊழியர்கள்) பொருள் விற்பனையாளர்களிடமும் மகாதிரா அரசாங்கமா(நஜிப்பா) என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது”, என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்த நாளேடு குறிப்பிட்டது. அவர் தன் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை.
மகாதிரைப் பலரும் மதித்தாலும் அவர் ‘ “இப்போது ஒரு தடங்கல் என்ற எண்ணம் பெருகி வருகிறது” என்று அந்த உயர் அதிகாரி கூறினார்.
இச்செய்தி தொடர்பில் புரோட்டோனைத் தொடர்பு கொண்டபோது அது கருத்துரைக்க மறுத்து விட்டது.
தடங்கல் இருக்க கூடாது! நஜிப் உடனடி நடவடிக்கை தேவை!