தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றம் காணும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

Hindraf People's Movement Logoகடந்த மார்ச் 25ஆம் தேதி மலேசியாகினி வெளியிட்டிருந்த செய்தியில் 2012 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் 18 தமிழ்ப்பள்ளிகளைத் துரித முன்னேற்றம் கண்டுவரும் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் துறையின் கீழ் செயல்படும்’ தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலச் செயல் திட்டக்குழு’ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன் விவரித்திருக்கிறார்.

தோட்டப்புறங்களிலிருந்து இந்தியர்கள் வெளியேறிவிட்டதால், அங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ள உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.

தோட்டப்புறங்களிலிருந்து பெருமளவில் இந்தியர்கள் புலம் பெயர்ந்து விட்டனர் என்பதும், இதனால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பெரிதும் குறைந்திருக்கிறது என்பதும் மலேசிய இந்தியர்கள் யாவரும் அறிந்த ஒன்றே.

Tamil Selvan Hindrafஇந்தப் பிரச்சனைக்கு ஒரே நிரந்தர தீர்வு இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தோட்டப்புறத்தில் செயல்பட்ட தமிழ்ப் பள்ளிகளை மறுநிர்மாணம் செய்யவேண்டும் என்பதும், இதற்காக மலேசிய இந்தியச் சமூகம் வலுவாக பலகாலமாக போராடி வருவதும் யாவரும் அறிந்ததே என்று ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் தலைமைத்துவ அவையின் உறுப்பினர் கி. தமிழ்ச்செல்வன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் குறிப்பிட்டுள்ள 18 பள்ளிகளில் இதுவரை எத்தனை தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகள் துரித மேம்பாடு அடைந்த, இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு மாற்றப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்பதை டாக்டர் ராஜேந்திரன் மலேசிய இந்தியர்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டார்.

ஒருவேளை, கட்டுமானப் பணிகள் முடிவுறாமல் இருந்தால், அத்தகைய மறுநிர்மாணிப்பு பள்ளிகளின் தற்கால கட்டுமானம் எந்தக் கட்டத்தை அடைந்திருக்கிறது, எப்போது மாணவர்கள் சேர்க்கை துவக்கப்படும் என்பதை டாக்டர் ராஜேந்திரன் விளக்க வேண்டும் என்றாரவர்.

“…வோம், …றோம்” இனியும் வேண்டாம்

N.S.Rajendran“மறுநிர்மாணிப்பு செய்வதாகத் திட்டம் உள்ளது , செய்வோம், செய்துக் கொண்டிருக்கிறோம், செய்து விடுவோம் என்ற நிலையில்லாத, உறுதியில்லாத அறிக்கையை மக்களுக்கு அளிப்பதைத் தவிர்த்து, எந்தெந்தப் பள்ளிகளில், எப்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து போதனைகள் துவங்கும் என்ற உறுதியான தகவலை மலேசிய இந்தியர்களுக்கு இப்போது ராஜேந்திரன் அளிக்க வேண்டும். இக்கோரிக்கையின் வழி அவரை குறை கூறும் நோக்கம் ஏதும் கிடையாது”, என்று தமிழ்ச்செல்வன் ஹிண்ட்ராப் பேரியக்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.

மலேசியன் டைஜெஸ்ட்.கோம் என்ற ஊடகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த செய்தி ஒன்றில் அப்போது ம.இ.கா துணைத் தலைவராக இருந்த டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இதே போன்ற ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார் . அந்த அறிக்கையில் டாக்டர் சுப்பிரமணியம் தோட்ட மற்றும் புறநகர்பகுதிகளில் உள்ள 60 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்யப் போவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை பற்றியும் விளக்கம் அளித்திருந்தார்.

இதனைச் சுட்டிக் காட்டிய தமிழ்ச்செல்வன், ஆளுக்கொரு அறிக்கை விட்டு மலேசிய இந்தியர்களை குழப்பாமல், உண்மையை உள்ளபடி விளக்கவேண்டும் என்ற ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் நியாயமான கோரிக்கையை டாக்டர் ராஜேந்திரன் முன்வைக்கிறோம் என்று கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும், மாணவர்கள் குறைவாக இருப்பதால் தமிழ்ப்பள்ளிகளை மூடுவதிலிருந்து தடுப்பதற்கும் எத்தனையோ தமிழ் நல்லுள்ளங்கள் ஆண்டுதோறும் தமிழ்ப்பணி செய்கின்றன. அவர்களின் முயற்சி வெற்றியடைய தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகள் இந்தியர்கள் புலம் பெயர்ந்த பகுதிகளுக்கு மாற்றம் காணும் நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

வரப்போகும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து, தமிழ்ப்பள்ளிகள் பகடைக்காய்களாக உருட்டப்படுவதை இந்திய சமூகம் இனியும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காது என்று தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாகக் கூறினார்.