சமூக ஆர்வலர்களான முகமட் மூசாவும் ஆதம் அட்லியும் அவர்களின் வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றச் சொல்லி மனு செய்திருக்கிறார்கள். அவர்களின் மனு ஏப்ரல் 15-இல் விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 28-இல் #KitaLawan தெரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் என்பதால் அங்கு அவர்கள் தங்கள் எதிர்வாதத்தை முன்வைக்க இயலாதிருக்கிறது என அவர்களின் வழக்குரைஞர் எரிக் பால்சன் கூறினார்.
குடிமக்கள் என்ற முறையில் கூட்டம் கூட தங்களுக்கு உரிமை உண்டு அதில் தெரு ஆர்ப்பாட்டங்களும் அடங்கும் என்பது அவர்களின் எதிர்வாதமாக அமையும்.
“அதன்மீது முடிவெடுக்கும் அதிகாரம் கீழ் நீதிமன்றங்களுக்குக் கிடையாது. அதனால்தான் இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றிவிட வேண்டும் என விரும்புகிறோம். இல்லையென்றால் இந்த எதிர்வாதத்தைக் கீழ் நீதிமன்றங்களில் எழுப்ப இயலாது..
“அவர்கள் செய்தது சட்டப்படியும் அரசமைப்புப்படியும் சரியானதே என்று மனுச் செய்திருக்கிறோம். அதை உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறோம்”,
அவர்கள் அமைதிப் பேரணிச் சட்டத்தின் பிரிவு 4(1)(சி), பிரிவு 4(2)(சி), பிரிவு 4(3) ஆகியவற்றை எதிர்க்கிறார்கள்.
அவை தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கின்றன.
“அது எங்களுக்குச் சரியாகப் படவில்லை. அரசமைப்புப்படி உரிமைகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், எங்களைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக மறுக்க இயலாது”, என பால்சன் கூறினார்.