டெக்சி ஓட்டுனர்களின் மறியலை போலீஸ் முறியடித்தது

taxiபயணங்களைப் பகிர்ந்துகொள்ளும்  சேவைக்கு  எதிராக  அரசாங்கம்  நடவடிக்கை  எடுக்காமலிருப்பதை  ஆட்சேபித்து  சுமார்  300  டெக்சி  ஓட்டுனர்கள்  மேற்கொண்ட  மறியல்  போராட்டம்  போலீசாரின்  அதிரடி  நடவடிக்கையால்  விரைவிலேயே  முடிவுக்கு  வந்தது.  ஆர்ப்பாட்டக்காரர்களில்  மூவர்  கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  நண்பகல்  12 மணிக்குள்  கலைந்து  செல்ல  வேண்டும்  என்று  போலீசார்  கெடு  விதித்திருந்தார்கள். கெடு முடிவுக்கு  வந்ததை  அடுத்து  அவர்கள்  நடவடிக்கையில்  இறங்கினர்.

டெக்சி  ஓட்டுனர்களின்  போராட்டம்  காலை  மணி  10க்குத்  தொடங்கியது.  அவர்கள்  ஜாலான்  புக்கிட்  பிந்தாங்கில்  பெவிலியன் மால்  அருகில்  டெக்சிகளைச்  சாலை  நெடுகிலும்  நிறுத்தி  வைத்தனர்.

நிலப்  போக்குவரத்து  ஆணையத்தின்மீதும்  அதற்குத்  தலைவராக  உள்ள  சைட்  ஹமிட்  அல்பார்மீதும் அவர்களுக்கு  அதிருப்தி.  அவரை  அங்கிருந்து  அகற்ற வேண்டுமென்பது  அவர்களின்  கோரிக்கை.

போராட்டத்தில்  மேலும்  டெக்சிகள்  கலந்துகொள்வதைத் தடை  செய்ய  போலீசார்  சுற்றியுள்ள  பல  சாலைகளை  மூடிவிட்டனர்.