அடினான் நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்றது ஏன்? டிஏபி பிரதிநிதி கேள்வி

wongடிஏபி  பாடுங்கான்  சட்டமன்ற  உறுப்பினர்   வொங்  கிங்  வை,  சரவாக்  முதலமைச்சர்  அடினான்  சாடெம்   அரசாங்க  நிலத்தை  விற்றது  தொடர்பாக  கேள்வி  எழுப்பியுள்ளார்.

அடினான்  முதலமைச்சராக  பதவியேற்ற  ஒன்பது  மாதங்களுக்குப்  பின்னர்  கடந்த  ஆண்டு  ஜனவரி  9-இல்  அந்த  நில  விற்பனை   நடந்துள்ளது.

பாலிங்கானில் 6,765  ஏக்கர்  பரப்புள்ள  நிலம்  ஏக்கருக்கு  ரிம300  என்ற  விலையில்  ஒரு  நிறுவனத்துக்கு  விற்கப்பட்டதாக  அவர்  சொன்னார்.

“6,000  ஏக்கருக்குமேல்  உள்ள  நிலத்தை  ஏக்கருக்கு  ரிம300  விலையில்  விற்றது  ஏன்  என்பதை  அடினான்  சரவாக்  மக்களுக்கு  விளக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறேன்”, என  வொங்   முகநூலில்  குறிப்பிட்டிருக்கிறார்.

“நிறுவனத்தின்  இயக்குனர்கள்  இருவர். ஒருவருக்கு வயது  22 மற்றவருக்கு  35.

“இவ்விரு  இளைஞர்களும்  யார்? எந்தத்  தகுதியின்  அடிப்படையில்  இவர்களுக்கு  நிலம்  விற்கப்பட்டது?”,  என்றவர்  வினவினார்.

இது  வொங்  டிசம்பருக்குப்  பின்னர்  கவனப்படுத்தியுள்ள  இரண்டாவது  நில  விற்பனையாகும்.

முந்திய  நிலவரத்தில்  அவர்,   அடினான்  பதவியேற்ற  இரண்டாவது  வாரத்திலேயே  2014  மார்ச்  17-இல்  லுண்டுவில்  3,121.33  ஏக்கர்  நிலம்  “சந்தை   விலைக்குக்  குறைவான  விலைக்கு  விற்கப்பட்டதாகக்  கூறியிருந்தார்.