நாமின் கணக்கைச் சரிபார்க்க வருகிறீர்களா? ஒங்குக்கு சரவணன் சவால்

sara‘நாம்’ அறவாரியம்  குறித்து  குற்றஞ்சாட்டும்  செர்டாங்  டிஏபி  எம்பி  ஒங்  கியான்  மிங்   நாமுக்கு  வரவேண்டும்  அதன்  கணக்குகளைச்  சரிபார்க்க  வேண்டும்.   எல்லாம்  ஒழுங்காக  நடப்பது  அப்போது  தெரிந்து  விடும்  என்று  இளைஞர்,  விளையாட்டுத்  துறை  துணை  அமைச்சர்  எம்.சரவணன்  கூறினார்.

அவரது  தலைமையில்  செயல்படும்  மஇகா- தொடர்புடைய  நாம்  அறவாரியத்துக்கு  அமைச்சிலிருந்து  ரிம19 மில்லியன் கொடுத்திருப்பது  ஆதாய  முரணாகாதா  என்று  வினவிய  ஒங்குக்கு  சரவணன்  இவ்வாறு  பதிலளித்தார்.

“நாளையே  நாம்  அறவாரிய  அலுவலகம்  வாருங்கள்  என்று  அவருக்குச்  சவால்  விடுக்கிறேன்.  அவருடைய  கணக்காளரையும்  அழைத்து  வரட்டும். கணக்குகளை  எல்லாம்  காட்டுகிறேன்”, என  சரவணன்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

ஆதாய  முரண்  என்று  கூறப்படுவதை  மறுத்த  துணை  அமைச்சர் நாமுக்கான  பணம்  பிரதமர்  துறையிலிருந்து  வந்தது  என்றும்  இளைஞர்  விளையாட்டு அமைச்சு  கண்காணிக்கும்  வேலையை  மட்டுமே  செய்கிறது  என்றும்  கூறினார்.

யாயாசான்  நாமை  மைக்கா  நிறுவனத்துடன்  ஒப்பிட்ட  பிகேஆர்  இளைஞர்  அமைப்பையும்  சரவணன்  சாடினார்.

நாம்  பதிவு  செய்யப்பட்ட  ஒரு  நிறுவனம்,  மஇகா  தலைவர்கள்  அதில்  இயக்குனர்களாக  உள்ளனர்.

“இரண்டும்  வெவ்வேறு. யாயாசான்  நாம்  பொதுமக்களிடமிருந்து  பணம்  திரட்டவில்லை.  உண்மையில்  சொந்தப்  பணத்தைப்  போட்டுத்தான்  அதை  நடத்திக்  கொண்டிருக்கிறோம்”, என்றார்.