போலீஸ் தலையீட்டை ஆட்சேபிக்க வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்கள் கூடுகின்றனர்

 

Bar Thiru1தங்களுடைய நடவடிக்கைகளில் போலீஸ் தலையிடுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க கூடுமாறு மலேசிய வழக்குரைஞர் மன்றம் அதன் உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

தங்களுடைய நான்கு உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வழக்குரைஞர் மன்ற அலுவலகம் மற்றும் பெடரல் போலீஸ் தலைமையகம், புக்கிட் அமான், ஆகிய இடங்களில் கூடுமாறு அச்சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் செயலாளர் கேரன் சியா யீ லின், வழக்குரைஞர்கள் சார்ல்ஸ் ஹெக்டர் பெர்ணான்டஸ், பிரான்சிஸ் பெரரா மற்றும் ஆர். சண்முகம் ஆகியோரே வாக்குமூலம் அளிப்பதற்காக போலீசாரால் அழைக்கப்பட்டுள்ள அந்த நான்கு உறுப்பினர்கள்.

நாளை பின்னேரத்தில் அவர்களுடைய வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்யவிருக்கின்றனர்.

கடந்த மார்ச் 19 இல், வழக்குரைஞர் மன்றத்தின் 70 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் சட்டத்துறை தலைவர் ஏஜி) குறித்து தாக்கல் செய்யப்பட்ட முன்மொழிதல் பற்றி விசாரிப்பதற்காக போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

போலீசாரின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஸ்டீவன் திரு கூறினார்.

போலீசாரின் இந்நடவடிக்கை வழக்குரைஞர் மன்றத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் போலீசார் தலையிடுவதாகும் என்றாரவர்.