அருள் கந்தா: கடமை முடிந்தது, விரைவில் 1எம்டிபி-இலிருந்து விலகுவேன்

arulஅருள் கந்தா  கந்தசாமி  1எம்டிபி  நிறுவனத்தின்  தலைமைப்  பொறுப்பை  ஏற்று  ஓராண்டுக்  காலம்  ஆகும்  வேளையில்  வந்த  வேலை  முடிந்து  விட்டதாக  நினைக்கிறார்.

அருள்  கந்தா  2015  ஜனவரியில்  1எம்டிபி-இல்  சேர்ந்தார். சேர்ந்த  சில  மாதங்களிலேயே  அந்நிறுவனத்தில்  நிதி  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதாகக்  குறைக்கூறல்களை  எதிர்நோக்க  வேண்டியதாயிற்று. அதன்  தொடர்பில்  மலேசியா,  சிங்கப்பூர்,  சுவிட்சர்லாந்து  முதலிய  நாடுகளில்  விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டன.

1எம்டிபி-இன் கடன்  பிரச்னைகளுக்குத்  தீர்வு  கண்டு  நிறுவனத்தைச்  சீரமைப்பதுதான்  தமக்குக்  கொடுக்கப்பட்ட  பொறுப்பு  என்றாரவர்.

“என்னப்  பொருத்தவரை, அதைச்  செய்து  முடித்து  விட்டேன். நிறுவனம்  பண வசதியுடன்  இருக்கையிலேயே  விலகப் போகிறேன்”, என்றவர் புளும்பெர்க்  செய்தி  நிறுவனத்துக்கு  அளித்த  நேர்காணலில்  கூறினார்.

1எம்டிபி-இல்  பல  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதாகக்  கூறப்பட்டாலும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தலைவராகக்  கொண்ட  அதன்  ஆலோசனை  வாரியம்  தவறு  எதுவும்  நிகழவில்லை  என்றுதான்  கூறி  வருகிறது.

அருள்  கந்தாவும்  அதே  கருத்தைத்தான்  கொண்டிருக்கிறார். வெளிநாட்டுச்  சட்ட  அதிகாரிகள்   விசாரணை  செய்யும்  நோக்கில்  அந்நிறுவனத்தை  அணுகியதில்லை  என்பதைச்  சுட்டிக்காட்டிய  அவர்,  குற்றச்சாட்டுகள்  ஆதாரமற்றவை  என்றும்  அரசியல்  நோக்கம்  கொண்டவை  என்றும்  கூறினார்.