தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றம் நடக்குமா அல்லது வெறும் கண்துடைபப்பா?

-பெ. ரமேஷ், ஹிண்ட்ராஃப் மக்கள் பேரியக்கம், தலைமைச் சபை உறுப்பினர், 31. 3. 2016. 
Hindraf People's Movement Logo

மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் தேசியப்பள்ளிகளுக்கு வழி விடும் வகையில் தாய்மொழிப்பள்ளிகளை மூடும் எத்தகையப் பரிந்துரைகளையும் அரசு கொண்டிருக்கவில்லை என்றும், மேலும் கல்வி சட்டத்தின் 28 ஆவது பிரிவு தேசிய மற்றும் தாய்மொழிப்பள்ளிகளை நிர்மாணிக்கவும் பராமரிக்கவும் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

அதே வேளையில் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் தாய் மொழிப்பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஓர் அதிர்ச்சித் தகவலையும் தந்துள்ளார்.

பாக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மார்க்குஸ் முஜிகோ தேசியப்பள்ளிகளுக்கு வழிவிடும் நோக்கில் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படுமா என்று எழுப்பி இருந்த கேள்விக்கு கல்வி அமைச்கார் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கையில் அதிகரிப்பு காணாத பள்ளிகளிகளின் செயல்பாட்டை நிறுத்த முடியும். இந்த சூழ்நிலையில் செயலற்றுபோன பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் விளக்கமளித்திருக்கிறார் கல்வி அமைச்சர்.

இந்தப் பதில் நம் தமிழ்பள்ளிகளின் தற்கால நிலைமையை எண்ணிப் பார்க்க வைக்கிறது. ஆண்டாண்டு காலங்களாக தோட்ட மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செயல்படும் நம் தமிழ்ப்பள்ளிகளின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொருளாதார சவால்களாலும் அரசாங்கத்தின் அலட்சியத்தினாலும் தோட்டங்களில் இருந்தும், புறநகர்ப்பகுதிகளில் இருந்தும் பிழைப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்கு புலம் பெயர்ந்த சரித்திரத்தின் விளைவாக சோக சின்னங்களாய் நலிந்து நிற்கின்றன பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள்.

ஆண்டு தோறும் இந்த நலிந்த தமிழ்ப்பள்ளிகளுக்கு போதிய மாணவர்களை சேர்க்காவிட்டால் அதையே காரணமாக வைத்து மூடுவிழா செய்துவிடுவார்களோ என்ற பதைபதைப்பில் நாடுமுழுதும் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வென்று பிரச்சாரம் செய்து குருவி சேர்ப்பதைப் போல அலைந்து மாணவர்களை இந்தத் தொலைதூரப் பள்ளிகளில் சேர்ப்பது நமக்கு வருடாந்திர சடங்காகிக் கொண்டு வருகிறது.

இந்த அவலத்திலிருந்து நம் தமிழ்ப்பள்ளிகளை மீட்டெடுப்பது ஒன்றும் எறிபடைதொழில்நுட்ப ரகசியமில்லை. பிள்ளைகள் இல்லாத இடத்தில் பள்ளிகள் இருந்து என்ன பயன்? பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு பள்ளிகளை மாற்றுங்கள் என்று ஆரம்ப தமிழ்ப்பள்ளி மாணவன்கூட தீர்வுக்கான வழியை சொல்லி விடுவான். இந்தத் தீர்வை அறியாதவர்கள் அல்ல நம் அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும். பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற திடமான நோக்கம் உண்மையில் கொண்டிருந்தால் முழுமனதாக காரியத்தில் இறங்கிச் செயல்பட்டு இந்தப் பிரச்சினையே இல்லாமல் செய்திருக்கலாம். ஆனல் திட்டம் போடுவதை மட்டுமே உத்தியோகமாகக் கொண்டு செயல்படுபவர்களால் ஒரு போதும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஒருவேளை, பிரச்சனைகள் தீர்வாகிவிட்டால் தங்களுக்கு உத்தியோகம் இருக்காதே என்று நினைக்கிறார்களோ என்னவோ!

ஆகவேதான், 2012 ஆம் ஆண்டிலிருந்து 18 தோட்டப்புற பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும்image1 (2) பணிகள் நடந்தது கொண்டிருகின்றன என தமிழ்ப்பள்ளி செயல்திட்ட தலைவர் ராஜேந்திரன் வழங்கிய பத்திரிக்கை அறிக்கையின் விவரத்தை தெளிவாக வெளியிடும்படி ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்க தலைமைச் சபை உறுப்பினர் கி.தமிழ்ச்செல்வம் அண்மையில் கேட்டிருந்தார். இதுவரை ராஜேந்திரன் வாய் திறக்கவில்லை. ஒருவேளை மந்திரிகளும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மட்டுமே பதில் அளிப்பார் போலும்!

இன்று நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அளித்த பதிலில் ஒளிந்திருக்கும் சூசகம் தமிழ் ஆர்வலர்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

நாங்கள் தமிழ்ப்பள்ளிகளை மூட மாட்டோம். ஆனால் தமிழ்ப்பள்ளிகள் தாமாகவே செயலற்று போய் விட்டால் அவற்றை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் கல்வி அமைச்சர் நமக்கு விட்டிருக்கும் எச்சரிக்கை. கொல்ல மாட்டோம். ஆனால் இயற்கை மரணத்திற்கு பொறுப்பேற்க மாட்டோம் என்பதாகத்தான் நாம் இதனை பொருள் கொள்ளவேண்டும்.

எத்தனை தமிழ்ப்பள்ளிகள் , எந்தெந்தத் தமிழ்ப்பள்ளிகள் எங்கு, எப்போது இந்தியர்கள் அதிகம்வசிக்கும் இடங்களுக்கு மாற்றம் காணப் படும் என்ற கேள்விக்கு நிறைவான பதில் வரும்வரை ஹிண்ட்ராப் பேரியக்கத்தின் நெருக்குதல் தொடரும் என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறோம்.

இந்தத் தோட்டப்புற மற்றும் புறநகர் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகள் முளையிலேயே களைந்திருக்கப்பட வேண்டும். அப்படி நடக்கவில்லை. இப்போது நாம் சுவாசித்துக் கொண்டிருக்கும் காலத்திலாவது இப்பிச்சனைக்கு ஒன்றாகக் குரல் கொடுத்து நம் தமிழ்த் தாய் உள்ளம் குளிரச் செய்வோம்.