“செடிக்” இந்தியர்களுக்கான மாரா அமைப்பாக மாற்றப்பட வேண்டும்

-மு. குலசேகரன், ஏப்ரல் 2, 2016.

kulaunilateralconversionமாரா பூமிபுத்ராக்களுக்கென 1ஆம் தேதி மார்ச் 1966ல் புறநகர் வட்டார மேம்பாடு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இன்று 10 லட்சம் பூமிபுத்ரா வணிகர்களை உருவாக்கியுள்ளது .மேலும் அதன் வழி 12 லட்சம் பட்டதாரி மாணவர்கள்  உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மலாய்க்காரர்களையும் பிற பூமிபுத்ராக்களையும் மற்ற இனங்களுக்கீடாக சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்று அரசாங்கம் போட்ட திட்டத்தினால்தான் செய்ய முடிந்தது.

மலேசிய இந்தியச் சமுதாயமும் சுதந்திரம் பெற்றதிலிருந்து பரவலாக முன்னேறியிருந்தாலும், மற்ற சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம். நமது பொருளாதாரம் நாட்டின் மொத்த சொத்துடைமையில் 1.5% கூட எட்டவில்லை. கல்வித் தரத்தில்  மற்ற இனத்துடன் போட்டிபோடும் ஆற்றலை இழந்து நிற்குகிறோம்.  ஆங்காங்கே நமது மாணவர்கள்  சிறப்பு தேர்ச்சி பெற்று இனத்துக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தாலும் , ஒட்டு மொத்த அளவில் நமது கல்வி முன்னேற்றம் ஆரோக்கியமானதாக இல்லை.

மாரா போன்ற ஒரு தனி நிறுவனம் ஒன்றினை மலேசிய இந்தியர்களுக்கென அமைக்கும் நேரம் கனிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதற்குத் தனியாக கல்விக்கூடங்கள், பொருளாதாரத்தைப் பெருக்கத் திட்டங்கள், அதற்கேற்ற அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பெற்ற ஒரு தனி அமைப்பு இந்தியர்களுக்கும் அமைக்கப்பட வேண்டும். இதன் வழி இந்தியர்களின் கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சியை வழி நடத்தும், பாதுகாக்கும் இந்தியர் சம்பத்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மைய தாய் அமைப்பாக இது இருக்க வேண்டும்.

இதற்கு சரியான மூல வேராக  செடிக் எனப்படும் இந்திய சமூக,  பொருளாதார மேம்பாட்டுத் திட்டப் பிரிவை அரசாங்கம் பயன் படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதனை விரிவாக்கம் செய்து மாரா போன்றே அதற்கு தனி அதிகாரங்களை வழங்கி  இந்தியர்களை கல்வியிலும் பொருளாதாரத்திலும், வியாபாரத்திலும் தலைமைத்துவத்திலும் முன்னேற  வழி செய்யவேண்டும்.

கல்விக் கென்று தனியாக மாரா தொழிநுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வைத்திருப்பது போன்று “செடிக்” தனியாக இந்தியர்களுக்கென்று ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கு தொழில்நுட்பம், திறன் பயிற்சிக் கழகம், பல்கலைக்கழகம் என அனைத்தும் ஓரிடத்தில் அமையப் பெற ஏற்பாடு செய்யவேண்டும் .

அதற்குத் தேவையான இடம் இப்பொழுது உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் என நான் நம்புகிறேன். ஏற்கனவே உள்ள பொது மருத்துவம், பல் மருத்துவம், மருந்தகம் போன்ற துறைகளோடு மேற்சொன்ன துறைகளும் ஆரம்பிக்கப்பட்டு இந்தியர்களுக்கென தனி கல்வி மையமாக  ஏய்ம்ஸ்ட் செயல்படலாம்.

 

ஏய்ம்ஸ்ட்  பல்கலைக்கழகம் செடிக்கின் கீழ் வர வேண்டும்

 

ஏய்ம்ஸ்ட்  தனி நபருடையதா? ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானதா? அல்லது ம.இ.காவின் சொத்தா? என பல சர்ச்சைகள் இப்பொழுது aimstபோய்க்கொண்டிருகின்றன. யார் அதன் உண்மையான உரிமையாளர் என்று அதன் நதி மூலம் ரிஷி மூலம்  ஆராய்ந்தால் உண்மையில் அது மக்களின் சொத்து. அது. மக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும் என்பது தெரியும். ம.இகா அன்று அதன்  ஒவ்வொரு கிளையிடமிருந்து ஒரு சிறு தொகையைப் பெற்றது. ஆனால், அரசாங்கம் கொடுத்தது ஏறக்குறைய 50 கோடி ரிங்கிட். மேலும் ஏய்ம்ஸ்ட் அமைந்துள்ள நிலத்தை இலவசமாக கெடா அரசாங்கம் வழங்கியிருந்தது  குறிப்பிடத்தக்கது. ஆக, இந்தியர்களுக்காக அரசாங்கம் கொடுத்த நிதியில்தான் இப்பொழுது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்  பணம் சம்பாதித்து ஒரு குறிப்பிட்ட சிலரின் கஜானாவை  நிரப்பிக் கொண்டு வருகிறது.

அரசாங்கப் பணம், மக்கள் வரிப்பணம்.  ஆகவே ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மக்களுக்கு போய்ச்சேர வேண்டுமானால் , அது செடிக் என்கின்ற, இந்திய சமூக  பொருளாதார மேம்பாட்டுத் திட்டப் பிரிவின் கீழ் வருவதே  முறையாகும்.

இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி அதன் இலக்கை அடைந்ததா என்று கண்காணிக்கும் தார்மீகக் கடமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. அதற்கொப்ப இத்திட்டம் செயலாக்கம் காண “செடிக்” கிற்கு வித்திட்ட பிரதமர் நஜிப்தான் முன்வரவேண்டும்.