மகாதீர்: ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டாம் என்று நஜிப்பை கேட்டுக்கொண்டேன், அவர் கேட்கவில்லை

 

MatGSTஇன்று சுட்டெரிக்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எதிர்ப்பு கூட்டத்திற்கு திடீரென்று வருகையளித்த முன்னாள் பிரதமர் மகாதீர், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டாம் என்று தாமே பிரதமர் நஜிப்பை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் நஜிப் அதற்கு இணங்காமல் அவரது திட்டத்தை அமல்படுத்தினார் என்று அக்கூட்டத்தில் பேசிய போது கூறினார்.

நஜிப், “அவரது கடனை அடைப்பதற்கு” அதனை அமல்படுத்தினார் என்று மகாதீர் மேலும் கூறினார்.

மகாதீர் அக்கூட்டத்திற்கு வந்த போது அமனா தலைவர் முகமட் சாபு ஒரு லோரியிலிருந்து பேசிக் கொண்டிருந்தார்.

இந்த ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியில் நஜிப் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

“நாம் இப்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கு எல்லாம் அவர்தான் காரணம். அதனால்தான் நாம் அவரை அகற்ற வேண்டும்”, என்று மகாதீர் கூறினார்.

அங்கு கூடியிருந்தவர்களின் சிரிப்பொலிக்கிடையில், “நானும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன்”, என்றாரவர்.

நஜிப் அகற்றப்பட வேண்டும் என்பதால், “தயவு செய்து (குடிமக்கள்) பிரகடனத்தில் கையொப்பமிடுங்கள். அப்போதுதான் நாம் மக்களின் மனக்குறைகளை மலாய் ஆட்சியாளர்களிடம் தாக்கல் செய்ய முடியும்”, அவர் மேலும் கூறினார்.

இது அரசமைப்புச் சட்டத்தில் இல்லையென்றாலும், ஆட்சியாளர்கள் மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பார்கள் என்று கூறிய மகாதீர், “மக்கள் இல்லாமல் ஆட்சியாளர்கள் இல்லை. அதனால் மக்களின் ஆதரவை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு அவர்களின் மனக்குறைகளையும் கேட்க வேண்டும்”, என்று அவர் குறிப்பிட்டார்.

தமது ஐந்து நிமிட பேச்சை முடிப்பதற்கு முன்பு, அங்கிருந்தவர்களிடம் கூட்டத்திலிருந்து கலைந்து செல்வதற்கு முன்பு குடிமக்கள் பிரகடனத்தில் கையொப்பமிடுமாறு மகாதீர் மீண்டும் வலியுறுத்தினார்.