பனாமா ஆவணங்களில் நஜிப் மகனின் பெயரும் உள்ளது

sonபனாமாவில்  உள்ள  வழக்குரைஞர்  நிறுவனத்திலிருந்து  கசிந்த  ஆவணங்களில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  புதல்வர்களில்  ஒருவரான  முகம்மட்  நசிப்புடின்  முகம்மட் நஜிப்பின்  பெயரும்  இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனின்  வெர்ஜின்  தீவுகளில்  உள்ள  இரண்டு  நிறுவனங்களில்,  ஜே  மரியோட் (Jay Marriot)  இண்டர்நேசனலிலும்(பிவிஐ),  பிசிஜே இண்டர்நேசனல்  வெண்ட்சர்  லிமிட்டட்டிலும்  அவர்  இயக்குனராக  இருந்திருக்கிறார்.

இப்படிச்  சொல்வதால்  அவர்  குற்றச்செயலில்  ஈடுபட்டார்  என்று  அர்த்தமல்ல  என்று   அனைத்துலக  புலன்விசாரணை  செய்தியாளர்  குழுமம் (ஐசிஐஜே)  கூறியது. ஐசிஐஜே,  ஜெர்மானிய  செய்தித்தாளான  Süddeutsche Zeitung-உடன்  சேர்ந்து  அந்தப்  புலன்  விசாரணையை  மேற்கொண்டுள்ளது.

“எந்தவொரு  நபரோ,  நிறுவனமோ  சட்டத்தை  மீறியதாகவோ   முறைகேடாக  நடந்து  கொண்டிருப்பதாகவோ  சொல்ல  வரவில்லை”,  என்று  அது  கூறியது.

ஐசிஜேஐ-இன்  கூற்றுப்படி  நசிப்புடின்  2009-இல்  ஜே  மரியோட்டில்   ஒர்  இயக்குனரானார். அதன்  இன்னொரு  இயக்குனர்  சோங்  சூன்  சென். இவர்  அப்போது   Malaysia Pacific Corp  நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனராக  இருந்தார். இப்போது  அதன்  தலைமை  செயல்  அதிகாரி.

சோங்,  2009-இல்  நசிப்புடினுடன்  சேர்ந்து  அந்நிறுவனத்தை  வாங்கியதை  ஒப்புக்கொண்டார்.  ஆனால்,   தொடக்கத்திலிருந்தே  அது  எந்தத்  தொழில்  நடவடிக்கையிலும்  ஈடுபட்டதில்லை  என்றார்.  நசிப்புடின்  நிறுவனத்தில்  தன்  பங்கை  சோங்கின்  சகோதரிக்கு  மாற்றிக்  கொடுத்து  விட்டு   2011  அதிலிருந்து  விலகிக்  கொண்டாராம்.

பிஜேசி  இண்டர்சேசனல்,  நசிப்புடினும்  மேம்பாட்டாளரான  மெகாட்  ஷரிமான்  சஹாருடினும்  சேர்ந்த  அமைத்த  ஒரு  நிறுவனம்.  ஆனால்,  உருவாக்கப்பட்ட  ஒராண்டிலேயே  அது  மூடப்பட்டது. மெகாட்  இப்போது  நசிப்புடின்  தலைமையில்  செயல்பாடும்  ஐக்கிய  இளைஞர்கள்  என்னும்  என்ஜிஓ-வின்  ஆலோசகராக  உள்ளார்.

இரண்டு  நிறுவனங்களுமே  வெர்ஜின்  தீவுகளில் Mossack Fonseca  வழக்குரைஞர்  நிறுவனத்தின்  மூலமாக  பதிவு  செய்யப்பட்டுள்ளன.  அதன்  பணியாளர்களில்  ஒருவர்தான்  ஆவணங்களைக்   கசிய  விட்டிருக்கிறார்.

மொத்தம்  214,000  நிறுவனங்கள்  பற்றிய  11.5  மில்லியன்  ஆவணங்கள்  கசிந்திருப்பதாகவும்  அவற்றை  78  நாடுகளின்  செய்தியாளர்கள்  ஆய்வு  செய்து  வருகிறார்கள்  என்றும்  கூறப்படுகிறது.  இந்த  ஆவணங்கள்  ‘பனாமா  ஆவணங்கள்’  என்று  குறிக்கப்படுகின்றன.