அம்னோ தோற்பதால் மாரா அழிந்து விடாது

maraபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறியிருப்பதுபோல்,  அம்னோ  தோற்றுப்போனால்  மஜ்லிஸ்  அமானா  ரக்யாட் (மாரா)  ஒன்றும்  அழிந்து  விடாது.

அது,  பூமிபுத்ரா  சமூகத்தின்  நலனைக்  கட்டிக்காக்கும்  அதன்  இலக்கைத்  தொடர்ந்து  நிறைவேற்றி  வருமே  தவிர   இப்போது  உள்ளதுபோல்  மேட்டுக்குடி  சார்ந்த  ஒருசில  பூமிபுத்ராக்களை  மட்டும்  வளப்படுத்திக்  கொண்டிருக்காது  என்று  என்று  பிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  மாட்  கூறினார்.

“மாரா  அதன்  இலக்குகளை  விட்டு  விலகிச்  சென்று விட்டது.  தேவை  உள்ளவர்களுக்கு  உதவி  கிடைப்பதில்லை. சில  தனிப்பட்டவர்கள்  மட்டுமே  மாராவைக்  கொண்டு  பயனடைகிறார்கள்.

“அம்னோவின்  ஊழல்  கலாச்சாரத்தின்  காரணமாக  ஆஸ்திரேலியாவில்  சொத்து  வாங்கியதில்  கோடிக்கணக்கில்  இழப்பு  ஏற்பட்டுள்ளது”, என்று  அவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அம்னோ  ஆட்சியில்  மாணவர்களின்  உதவிச் சம்பளத்துக்கான  ஒதுக்கீடுகளைக்கூட   குறைக்க  வேண்டிய  கட்டாயம்  ஏற்பட்டுள்ளது  என்று  நிக்  நஸ்மி  குறிப்பிட்டார்.

அவருடைய  கருத்தை  எதிரொலித்த  பிகேஆர்  மகளிர்  தலைவர்  சுரைடா  கமருடின்  மாராவுக்குப்  பணம்  பொதுமக்களிடமிருந்து  வருகிறது  அம்னோவிடமிருந்து  அல்ல  என்பதை  பிரதமர்  உணர்ந்து  பேச  வேண்டும்  என்றார்.