சரவணன்: மைஸ்கில்ஸ் அறவாரியம் பெரும் உருமாற்றம் செய்துள்ளது

 

DSC_0081 (1)இந்திய இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட மைஸ்கில்ஸ் அறவாரியம் இன்று அதன் நான்காவது பட்டமளிப்பு நிகழ்ச்சியை கோலாலம்பூர், சோமா அரங்கத்தில் நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் தொழிற்பயிற்சி பெற்ற 149 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்று உரையாற்றிய இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை துணை அமைச்சர் எம். சரவணன், “உழைத்தவர்கள் வெற்றி பெறாமல் போனதே இல்லை. மைஸ்கில்ஸ் அறவாரியம் பெரும் உருமாற்றம்” செய்துள்ளது என்று கூறினார்.

காலை மணி 10.00 க்கு தொடங்கி மாலை மணி 5.00 வரையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர் உட்பட 300 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் மைஸ்கில்ஸ் மாணவர் பற்றி கூறப்பட்ட புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் மைஸ்கில்ஸ் மாணவர்கள் படைத்த ஒரு கலை நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்ததோடு அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மைச்கில்ஸ் அறவாரியயத்தின் இயக்குனர் வாரியத்தின் தலைவர் ராஜா ரஷிட் பின் ராஜா பாடியோஸாமான், உடல்நிலை காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.என்றாலும் அவரது வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

இயக்குனர் வாரியத்தின் இதர உறுப்பினர்களில் டாக்டர் சண்முக சிவா, சி. பசுபதி, ரிச்சர்ட் ஹியு சியோங் மிங் மற்றும் அ. இராகவன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர்.

 

நீங்கள் மாறி இருக்கிறீர்களா?

 

மைஸ்கில்ஸ் தொழிற்பயிற்சி அளித்திருக்கிறது. அது ஒரு பெரிய விசயமல்ல. அது உங்களை மாற்றியுள்ளதா என்பதுதான் முக்கியம் என்று இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் சண்முக சிவா கூறினார்.

இப்பயிற்சி உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இது முதல்படிதான். பட்டறிவும் படிப்பறிவும் கொடுக்கப்பட்டிருக்கிறது,.அவற்றைக் கொண்டு நீங்கள் முன்னேற வேண்டும். இது ஒரு தொடக்கமே. உறவு தொடர வேண்டும் என்று டாக்டர் சண்முக சிவா கேட்டுக் கொண்டார்.

 

நன்றி உணர்வு இல்லாததால் தாழ்ந்து இருக்கிறோம்

 

மைஸ்கில்ஸ் அரசாங்க அங்கீகாரம் பெற்றது. அதன் நோக்கம் திறன்களைப் பெறுவதற்கு அப்பாற்பட்டது. நீங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். அதுவே அதன் தலையாய நோக்கம் என்று சி. பசுபதி கூறினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது பற்றி பேசியிருக்கிறோம். ஆனால், ஒரு திட்டவட்டமான நடவடிக்கை துணை அமைச்சர் மு. சரவணன் மற்றும் பிரதமர் துறையைச் சேர்ந்த ரவின் பொன்னையா ஆகியோரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது என்றாரவர்.

DSC_0101அரசாங்கம் முதலில் ரிம1.5 மில்லியன் நிதி உதவி அளித்தது. பின்னர், ரிம10 மில்லியன் கொடுத்தது. இது களும்பாங்கில் ஒரு தொழிற்பயிற்சி கல்லூரி எழுப்புவதற்காகும் என்று கூறிய பசுபதி, “நாம்” அமைப்பின் வழி 5 இலட்சம் பெற்றுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

நாம் தாழ்ந்து இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது நாம் நன்றி உணர்வு இல்லாமல் இருப்பதுதான் முக்கியமானது என்றாரவர்.

இந்நிகழ்ச்சி இங்கு நடத்தப்படுவதற்கு காரணம் மாதம் ரிம10 வீதம் நமது மக்களிடமிருந்து வசூலித்து தோட்டங்களையும், கோலாலம்பூரில் இந்தக் கட்டடத்தையும் எழுப்பிய வி.டி சம்பந்தனை நினைவுகூர்வதற்காகும் என்று பசுபதி மேலும் கூறினார்.

மைஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு உதவிகள் வழங்கிய துணை அமைச்சர் மு. சரவணனுக்கும், உதவிகள் அளித்த இதர அன்பர்களுக்கும் பசுபதி நன்றி கூறினார்.

மேலும், மைஸ்கில்ஸ் வழி பயிற்சி பெற்ற மாணவர்கள் சமுதாயத்திற்கு உதவ முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

வாக்குகளுக்காக நம்மை தேடி வருகிறார்கள்

 

இந்நாட்டில் காலம் எந்த அளவுக்கு மாறி விட்டது என்பதற்கு “லெட்டர் மூலம் காதல் பண்ணிய காலம் மாறி விட்டது” என்பது போன்றவற்றை கூறிய துணை அமைச்சர் மு. சரவணன் இப்போது இந்தியர்கள் இந்நாட்டிற்கு சம்பந்தம் இல்லாதவர்களாகி விட்டனர் என்று திட்டவட்டமாக கூறினார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள்/இந்தியர்கள் அனைத்துத் தொழில்களிலும் முக்கியமான பங்காற்றினார்கள். இப்போது அனைத்தும் அந்நியர்மயமாகி விட்டது என்று கூறிய அவர், பாருங்கள், டாக்டர் சிவாவும் பதியும் தங்களுடைய தொழில்கள் வழி பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அவர்கள் ஏழைகளுக்காக நிதி திரட்டி கல்லூரிகள் நடத்துகிறார்கள் என்றார்.

“இந்நாட்டிற்கு நாம் சம்பந்தம் இல்லாதவர்கள் ஆகிவிட்டோம். எந்தத் துறைக்கும் நாம் முக்கியமானவர்கள் இல்லை. ஆனால், நமது m.saravananவாக்குகளுக்காக அவர்கள் நம்மைத் தேடி வருகிறார்கள்.

“நமது உழைப்பால் நாடு முனேறியது. உழைத்து உழைத்து நாம் ஒட்டாண்டியாகி விட்டோம்”, என்று கூறிய சரவணன், “இன்னும் 10 ஆண்டுகளில் நீங்கள் கையேந்தி நிற்க வேண்டியிருக்கும்”, என்றும் கூறினார்.

இங்கு 3 மில்லியன் வங்காள தேசிகள் இருக்கிறார்கள். தொகுதிகள் (தேர்தல் தொகுதிகள்) அவர்களின் கைக்குள்ளாகி விடும் என்பதைத் தெரிவித்த அவர், படிப்பு இல்லை என்றால் “அடியாள் அல்லது தே தாரே” வேலைதான் கிடைக்கும். ரிம5 இலட்சம் இல்லாமல் வீடு வாங்க முடியாது. விலைவாசிகள் மற்றும் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் செலவுகள் ஏறிவிட்டன. இந்த வாழ்க்கையை மாற்றி அமைக்க மைஸ்கில்ஸ் உங்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இதற்குப் பின்னரும் நீங்கள் ஏழைகள் என்றால், அது உங்களுடையப் பங்காகும் என்று துணை அமைச்சர் நிலைமையை விளக்கினார்.

“உங்களைப் படிக்க வைக்க மைஸ்கில்ஸ் பிச்சை எடுக்கிறது. வெற்றிக்குப் பெரிய விலை உண்டு. மைஸ்கில்ஸ் உங்களுக்கு முதல்படியை அமைத்துக் கொடுத்துள்ளது”, என்று சரவணன் தீர்த்தமாகக் கூறினார்.

இந்தியர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றை பற்றி குறிப்பிட்ட துணை அமைச்சர் சரவணன், மகாபாரதத்தில் ஐவருக்கு எதிராக நூறு பேர் இருந்ததைச் சுட்டிக் காட்டினார்.