ரபிஸி: நான் செய்தது சரியே அதற்காகத்தான் சிறை செல்லவும் துணிந்தேன்

rafஅதிகாரத்துவ  இரகசிய  சட்டத்துக்கு (ஓஎஸ்ஏ)  உட்பட்ட ஆவணங்களை  அம்பலப்படுத்தியற்காக  சிறைத் தண்டனை  விதிக்கப்படலாம்,  நாடாளுமன்ற  உறுப்பினர்  பதவியை  இழக்கலாம்  என்று  கூறப்பட்டாலும்   அரசாங்க  ஊழலை  எதிர்க்கும்  போராட்டத்தில்  தாம்  செய்ததுதான்  சரி  என்று  பிடிவாதம்  பிடிக்கிறார்  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி.

“இதை  நான்  சொல்லித்தான்  ஆக  வேண்டும். இந்த  ஒரு  விசயத்தில்  பெரும்பாலோருடன்  என்னால்  ஒத்துப்போக  இயலாது. நான்  எப்போதும்  என்  உள்ளுணர்வு  சொல்வதைத்தான்  செய்வேன்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

பாண்டான்  எம்பி  ஓஎஸ்ஏ-இன்  கீழ்  மூன்று  நாள்  தடுப்புக் காவலில்  இருந்துவிட்டு பிணையில்  வெளிவந்திருக்கிறார்.

பலர்,  லெம்பாகா  தாபோங்  அங்காத்தான்  தெந்திரா(எல்டிஏடி)  மற்றும்  1எம்டிபி  இரகசிய  ஆவணங்களை  அம்பலப்படுத்திய  அவரது  செயலைப்   பாராட்டினாலும்  அதற்காக  அவர்  நாடாளுமன்ற  பதவியை  இழக்கும்  அபாயம்  இருப்பதையும்  சுட்டிக்காட்டுகிறார்கள். ரபிஸி  உள்ளே  இருப்பதைவிட  வெளியில்  இருப்பதுதான்  முக்கியம்  என்பது  அவரகளின்  கருத்து.

ஆனால்,  ரபிஸி  அதை  ஒத்துக்கொள்ளவில்லை.

இப்படியெல்லாம்  கணக்குப்  பண்ணி  நடந்து  கொள்வது  தவறு  என்கிறார்  அவர்.