எத்தனை தமிழ்ப்பள்ளிகள் எங்கே, எப்போது இடமாற்றம் காண்கின்றன?

-வி.சம்புலிங்கம், தலைமைச் சபை உறுப்பினர், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம், ஏப்ரல் 4, 2016

 

Tamil school our choice with studentsகுறைவான மாணவர் சேர்க்கையால் நலிந்து வரும் தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றம் குறித்து ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் எழுப்பிய கேள்விகளுக்கு 9 ஏப்ரல் 2016 தமிழ் மலர் நாளிதழில் மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.எஸ். இராஜேந்திரன் பதில் சொல்ல முனைந்திருக்கிறார்.

தோட்டப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான அனைவரும்அறிந்த காரணத்தை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: 2012 முதலே தொடக்கப் பணிகளைச் செய்த வண்ணம் இருப்பதாகவும், பேராக் மாநிலத்தில் 10 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள், பள்ளி மேலாளர் அறவாரியத் தலைவர்கள், ,மாநிலஅமைப்பாளர்கள் ஆகியோரோடு கூட்டம் நடத்துவதாகவும், இப்பளிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார். இதில் நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.

மேலும், தொடர் நடவடிக்கைகளுக்கு சிறப்பு நடவடிக்கை குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளனவாம். சுங்கை தீமா, கிரியான் ஆறுமுகம் sambu (1)பிள்ளை, கோத்தா லீமா போன்ற பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்க்கான அடிப்படை பணிகள் தற்போது நடைபெறுகிறதாம். 2012 நிதி ஒதுக்கீட்டின் வழி 18 தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், 2013 நிதி ஒதுக்கீட்டின்மூலம் மேலும் 18 தமிழ்ப்பள்ளிகள் மாற்று இடங்களில் நிர்மாணிக்கப் படுகின்றன என்றும் அவர் கூறி இருக்கிறார். இது போக 2015-2016 இல் செடிக் மூலம் பெரும் நிதியில் மேலும் ஒரு சிறப்பு குழுவை உருவாக்கி இடமாற்றம் காணும் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவப் போகிறார்களாம்.

இராஜேந்திரன் மீது எங்களுக்கு எவ்விதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. இந்நாட்டு தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்ககூடிய ஒரு அதிமுக்கிய பொறுப்பை அவர் ஏற்றுள்ளார் என்பது போன்ற தோற்றம் பொதுவாக நாட்டில் நிலவுவதால் எங்களின் கேள்விகள் அவரின் மீது விழுகின்றன.

இந்நாட்டின் சட்ட அமைப்பிலும், கல்விக் கொள்கையிலும் தமிழ்ப்பள்ளிகள் நிலையான இடத்தை பெற்றிருக்கின்றன. கல்வி அமைச்சின் கீழ் நம் தமிழ்பள்ளிகள் இடம் பெற்றிருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. அப்படி இருந்தும் தமிழ்ப்பள்ளி விவகாரங்களை கையாள்வதை அரசும், கல்வி அமைச்சும் நேரிடையாக தலையிட்டு தீர்வு காண தீவிரம் காட்டாமல் அப்பொறுப்பை இப்போது இராஜேந்திரனிடம் தாரை வார்த்து விட்டதாகவே கருதுகிறோம்.

N.S.Rajendranஇந்தப் பொறுப்பை இவரிடம் கொடுத்ததற்கு இரண்டு காரணங்களே இருக்க முடியும்: மற்றவர்களை காட்டிலும் இவர் விரைந்து செயல்பட்டு தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடுவார் அல்லது தொடரும் தமிழ்ப்பள்ளிகளின் அவலம் குறித்து நேரடியான பொறுப்பை ஏற்காமல் தங்களை தற்காத்து பழியை ஏற்றுக்கொள்ள ஒருவரை பிரதமரும், கல்வி அமைச்சும் பலியாக்க முற்பட்டு இருக்க வேண்டும். இன்றைய சூழலில் கல்வி அமைச்சாலும், அதன் அமைச்சராலும், துணைஅமைச்சர்களாலும் கூட தீர்க்க முடியாத அதிசவால்கள் நிறைந்த பொறுப்பை இராஜேந்திரன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றுதான் நாம் அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது.

தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றம் என்பது இருதய அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தை அடைந்துள்ளது என்பது நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கசப்பான உண்மையாகும். ஆகவேதான், இப்பிரச்சனையில் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் தீவிர நாட்டம் கொண்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகளின் இட மாற்றம் குறித்து நெடு நாட்களாகவே தமிழ் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர். இது குறித்து நாம் கேள்வி எழுப்பும் போதெல்லாம் நமக்கு கிடைக்கும் பதில்கள் திடமனாதாக இல்லை என்பதே எங்கள் வருத்தம். சிறப்பு குழு அமைப்பதும், பரிசீலிப்பதும், திட்டம் போடுவதும், நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பதும், மட்டுமே நமக்கு பதிலாக வந்து கொண்டிருக்கின்றன.

குறைவான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் குறித்து சமுதாயத் தலைவர்கள் அளித்து வரும் தகவல்கள் சிலவற்றை வாசகர்கள் Hindraf People's Movement Logoகவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்:

“குறைவான மாணவர்களை கொண்ட தமிழ்ப் பள்ளிகள் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு இடமாற்றம் காணும்” –ம.இ .கா துணைத்தலைவர் ,டத்தோ டாக்டர் சுப்ரமணியம் 23 செப்டம்பர் 2011 ஆதாரம் : www.mic.org.my

“தோட்டப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் குறைந்த அளவிலான மாணவர்களை கொண்டுள்ள சுமார் 60 தமிழ்பள்ளிகள் அருகாமையில் உள்ள வீடமைப்பு பகுதிகளுக்கும், நகரங்களுக்கும் இடமாற்றம் செய்யப்படுவதின் வழி அதிக மாணவர்களை ஈர்க்க முடியும்.” – ம.இ கா துணைத் தலைவர், டாக்டர் சுப்ரமணியம் 02 பெப்ரவரி 2014 ,ஆதா : www.malaysiandigest.com

“குறைவான மாணவர்களை கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது, மாறாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு மாற்றப்படும்”- ம.இ.கா தலைவர் ஜி. பழனிவேல். 12 ஜனவரி 2014 ஆதாரம்: www.themalaymailonline.com

“குறைவான மாணவர்களை கொண்டுள்ள தாய் மொழிப் பள்ளிகளை இடமாற்றம் செய்து அதிகமான மாணவர்களை சேர்க்க அரசு திட்டம்”-பி. கமலநாதன், இரண்டாம் துணைக் கல்வி அமைச்சர். ஆதாரம : www.therakyatpost.com, 4 ஜனவரி 2015

“பெற்றோரின் 100 விழுக்காடு ஆதரவு இருந்தால் குறைவான மாணவர்களை கொண்டுள்ள ஒதுக்குப்புற பகுதிகளில் அமைத்திருக்கும் தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய முடியும்.“ -பி. கமலநாதன், இரண்டாம் துணைக் கல்வி அமைச்சர். ஆதாரம் : www.themalaysiantimes.com.my 13 ஏப்ரல் 2015

“புதிய கல்வி ஆண்டு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், பேராக் மாநிலத்தில் உள்ள குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.” -ம.இ .கா துணைத் தலைவர் எஸ். கே .தேவமணி. ஆதாரம்: www.thestar.com.my – 7 ஜனவரி 2016

“2012 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் 18 தமிழ்ப்பள்ளிகளைத் துரித முன்னேற்றம் கண்டுவரும் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக….” டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலச் செயல் திட்டக்குழு ஆதாரம் : www.malaysiakini.com – 25 மார்ச் 2016.

“குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது”, டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர், ,தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலச் செயல் திட்டக்குழு. ஆதாரம் : 9 ஏப்ரல் 2016 தமிழ் மலர் நாளிதழ்.

தமிழ் பள்ளிகள் குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நிறைவான பதில் அளிக்கும் கடமை இராஜேந்திரனுக்கு உள்ளது. அந்த வகையில் எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த தமிழ்ப்பள்ளிகள், எந்தெந்தப் பகுதிகளுக்கு ,எப்போது இடம் மாற்றம் காண இருகின்றன? இப்போது, இன்றைய நிலையில் இடமாற்ற கட்டுமான பணிகள் எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த பள்ளிகளுக்கு எந்தெந்தப் பகுதிகளில் நடந்து கொண்டிருகின்றன? கட்டுமானப் பணிகள் எந்தெந்த மாநிலங்களில் எப்போது நிறைவடைந்து, மாணவர் சேர்கை எப்போது துவங்கும்? இதுவே மலேசிய தமிழ் ஆர்வலர்கள் விபரமாக அறிந்துகொள்ள முன்வைக்கும் கேள்விகள்.

தமிழ் மலர் நாளிதழ் மூலம் அவர் வழங்கி இருக்கும் அறிக்கை நிறைவானதாக இல்லை.நிறைவான, தெளிவான, திடமான பதிலை அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.