ஜாகீரை ‘சைத்தான்’ என்று சொன்னதற்கு ராமசாமி வருத்தம் ஆனாலும் கண்டனக் கணைகள் நிற்கவில்லை

rsamyமுஸ்லிம்  ஆன்மிகப்  பேச்சாளர்  டாக்டர்  ஜாகீர்  நாயக்கை  “சைத்தான்”  என்று  சொன்னதற்காக  டிஏபி  தலைவர்  பி.இராமசாமி  வருத்தம்  தெரிவித்திருந்த  போதிலும்  அவருக்கு  எதிரான  கண்டனங்கள்  நிற்பதாக  தெரியவில்லை.

“நான் பயன்படுத்திய  ‘சைத்தான்’  என்ற  சொல்  மலேசிய  முஸ்லிம்களிடையே  ஆத்திரத்தையும்  அதிருப்தியையும்  ஏற்படுத்தியிருப்பது கண்டு  வருந்துகிறேன்.

“இஸ்லாத்துக்கு  எதிராகவோ  இந்நாட்டு  முஸ்லிம்களுக்கு  எதிராக  அப்படிச்  சொல்லவில்லை. குறிப்பிட்ட  இந்த  மனிதருக்கு எதிராக  மட்டுமே  அப்படிச்  சொன்னேன்”, என்று  இராமசாமி  அறிக்கை  விட்டிருந்தார்.

இராமசாமி  அவரது  முகநூல்  பக்கத்தில்  அவ்வாறு  குறிப்பிட்டிருந்தார். பின்னர்  அப்படிச்  சொல்வது  முறையற்றது  என்பதை   உணர்ந்து  நீக்கி  விட்டார்.

அவரது  செயலை  அமானா  கட்சியின்  தொடர்பு இயக்குனர்  காலிட்   சமட்   பாராட்டினார். ஆனாலும்  ஜாகீர்  முஸ்லிம்- அல்லாதாருக்கு  எதிராக  வெறுப்புணர்ச்சியைத்  தூண்டுகிறார்  என்ற  டிஏபி  தலைவரின்  கருத்தை  மறுத்தார்.

மற்ற  எதிரணித்  தலைவர்கள்  அவ்வளவு  நாசூக்காக  நடந்து  கொண்டார்கள்  என்று  சொல்வதற்கில்லை.

பொக்கோக்  செனா  எம்பி  மாபுஸ்  ஒமார், கல்விமானான  முன்னாள் பேராசிரியர்  இராமசாமி  அறிவார்ந்த  சமூகத்தையே  கேவலப்படுத்தி  விட்டார்  என்று  குறிப்பிட்டார்.

பினாங்கு  துணை  முதல்வரின்  கருத்து  ஜனநாயகத்துக்கு  விரோதமானது  என்று  பினாங்கு  பிகேஆர்  மகளிர் பிரிவு  சாடியது.