ஸகீர் மிகச்சிறந்த மனிதர், குறுக்கிடாதீர், ஷகிடான் கூறுகிறார்

 

shahidanஇஸ்லாமிய சமய போதகர் டாக்டர் ஸகீர் நாயிக்கை குறைகூறும் மஇகா மற்றும் இதர இந்திய அரசு சார்பற்ற அமைப்புகள் இஸ்லாமிய சமயம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் குறுக்கிட்டிருக்கக்கூடாது என்று அம்னோ அமைச்சர் ஒருவர் இன்று கூறினார்.

ஸகீர் ஒரு “மிகச்சிறந்த மனிதர். அவர் சமய ஒப்புமை செய்வதில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்று பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் வர்ணித்தார்.

“இது சமயம் (இஸ்லாம்) சம்பந்தப்பட்ட விவகாரம், குறுக்கீடு செய்யத் தேவை இல்லை.

“(பிரபலமான தென்ஆப்ரிக்க இஸ்லாமிய அறிஞர்) அஹமட் டீடாட்டிற்கு பின்னர், அவர் (ஸகீர்) ஒரு மிகச் சிறந்த மனிதர் என்று நான் கருதுகிறேன். அவர் அறிவை முன்வைக்கும் ஒருவர்”, என்று ஷகிடான் இன்று கோலாலம்பூர் அம்னோ தலைமையகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஸகீர் இங்கிருப்பது இஸ்லாம் குறித்த ஏராளமான தவறான கருத்துகளை அகற்றுவதற்கு உதவும் என்று தாம் உணர்வதாக கூறிய ஷகிடான், இஸ்லாம் குறித்த பல்வேறு விசயங்கள் இப்போது குழப்பமாக்கப்பட்டுள்ளது.

“இஸ்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சமயமாகியுள்ளது”, என்று ஷகிடான் மேலும் கூறினார்.

வார இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் ஸகீரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனுமதிகளை அதிகாரிகளிடமிருந்து பெற்றுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அபு ஷாரிஸ் ஷராஜுன் ஹோடா தெரிவித்தார்.

 

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அழைப்பு

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு முஸ்லிம் அல்லாத அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு அழைப்புகள் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

தங்களுடைய அழைப்பை எந்த ஓர் என்ஜிஒ-வும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

 

தலைப்பில் மாற்றம்

 

மலாக்காவில் நடைபெறவிருக்கும் ஸகீரின் “இந்து சமயத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான ஒப்புமைகள்” என்ற சொற்பொழிவின் தலைப்பு இப்போது “இஸ்லாத்தில் மகளிரின் உரிமைகள்” என்று மாற்றப்பட்டுள்ளது.