கால்பந்து பற்றி விவாதிக்க தயாரா? கைரிக்குச் சவால் விடுகிறார் துங்கு இஸ்மாயில்

ismaiஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்,  தேசிய  கால்பந்தாட்டக்கார்கள்  பற்றித்  தம்முடன்  விவாதமிட வருமாறு  இளைஞர்,  விளையாட்டுத்  துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடினுக்குச்  சவால்  விடுத்திருக்கிறார்.

நேற்றிரவு  தம்  முகநூல்  பக்கத்தில்  பதிவிட்டிருந்த  பட்டத்திளவரசர்  கால்பந்தாட்ட  வீரர்கள்  பற்றிச்  சொல்லப்படும்  பொய்களைக்  கேட்டுக்கேட்டு  சலிப்படைந்து  போனதாகக்  கூறினார்.

கால்பந்தாட்டக்காரர்களிடம்  தரக்குறைவு  காணப்படுவதை  ஒப்புக்கொண்ட  இளவரசர்  அதற்குக்  கால்பந்து  சங்கங்கள்  பின்பற்றும்  முறைகளும்  பயிற்சிகளும்தான்  காரணம்  என்றார்.

“கால்பந்தாட்டக்காரர்களையே  குறை  சொல்லிக்  கொண்டிருக்கக்  கூடாது.  அதற்குத்  தாங்களே  காரணம்  என்று  கால்பந்து  சங்கங்களும் பயிற்றுநர்களும்  முன்வந்து  பொறுப்பேற்க  வேண்டும்  என்பதே  என்  வாதம்.

“இதைத்தான் பொறுப்பு  என்பது. எஃப்ஏஎம்-மும்  கால்பந்து  சங்கங்களும்  பயிற்றுனர்களும்  விளையாட்டாளர்மீது   பழியைப்  போட்டுவிட்டுத்  தப்பியோடக்  கூடாது”, என்று  துங்கு  இஸ்மாயில்  குறிப்பிட்டார்.

ஆஸ்ட்ரோ  நம்  தேசிய  கால்பந்துக்குழுவின்  மட்டமான  ஆட்டத்துக்கு  யார்  காரணம்  என்று  விவாதிப்பதற்கு  ஒரு  நேரலை  தொலைக்காட்சி  நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு  செய்ய  வேண்டும்  என்று  வலியுறுத்திய  பட்டத்திளவரசர்,  அதில்  கைரி,  எஃப்ஏஎம்  பிரதிநிதி,  ஒங்  கிம்  சுவி,  லிம்  தியோங்  கிம், சத்தியா  ஆகியோருடன்  தாமும்  கலந்து  கொள்ள  வேண்டும்  என்றார்.

“அந்நிகழ்ச்சியில்  கால்பந்து  ரசிகர்கள்  கருத்துச்  சொல்வதற்கும்  கேள்வி  கேட்பதற்கும்  வாய்ப்பு  வழங்கப்பட  வேண்டும்”,  என்றார்.