கடந்த ஆகஸ்ட் மாதம் பெர்சே 4 பேரணி நடத்தப்போவது குறித்து பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கொடுத்த அறிவிக்கையைப் பெற்றுக்கொள்ளாததற்காக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் போலீசைக் கடிந்து கொண்டது.
எதிர்வாதி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலிருந்து அமைதிப் பேரணிச் சட்டத்தின்படி(பிஏஏ) டட்டாரான் மெர்தேகாவில் பேரணி நடத்தப்போவது குறித்து மரியா டாங் வாங்கி போலீஸ் தலைவர் சைனோல் சாமாவிடம் அறிவிக்கை கொடுக்க முயன்றிருப்பது தெளிவாக தெரிகிறது.
“போலீஸ் ஏன் அதை வாங்கிக்கொள்ளவில்லை என்பதுதான் கேள்வி. அதைப் பெற்றுக்கொள்ளாதிருக்க எக்காரணமுமில்லை”, என நீதிபதி முகம்மட் ஷரிப் அபு சமா கூறினார்.
எனவே, பத்து நாள்களுக்குள் போலீசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு மரியா அறிவிக்கை கொடுக்க முயன்றிருக்கிறார் என்பதால் பிஏஏ சட்டப்படி அவர் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று நீதிபதி உரைத்தார்.
ஆனால், பேரணிக்கு முன் என்யு செண்ட்ரலில் ஒன்றுகூடியது தொடர்பான குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மரியாவின் மனுவை நீதிபதி நிராகரித்தார். ஏனென்றால், அந்த ஒன்றுகூடல் குறித்து அவர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.