அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதை ஒரு விருப்பத்தேர்வாக தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று டிஏபி வாதிடுவது தப்பு என்கிறார். அது அரசமைப்புக்கு முரணானது என்பது அவருடைய வாதம்.
“(அரசமைப்பின்) 152வது பகுதி அதிகாரப்பூர்வ விவகாரங்கள் எல்லாமே தேசிய மொழியான மலாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்கிறது. எனவே பிபிஎஸ்எம்ஐ அரசமைப்புக்கு முரணானது.”
எல்லாமே எப்போதும் அப்படித்தான் இருந்தது. முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்தான் அக்கொள்கையைத் தன்மூப்பாக மாற்றி அமைத்தார்.
2010-இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்கூட பிபிஎஸ்எம்ஐ அரசமைப்பு பகுதி 152-ஐ மீறவில்லை என்றுதான் தீர்ப்பளித்தது. ஆனால், அது தப்பு என்றார் அசீஸ்.
“அரசமைப்பு மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்வதைத் தடுக்கவில்லை; அதற்காக பொதுப்பணத்தையும் செலவிடலாம். ஆனால், அதற்கு கணிதத்தையும் அறிவியலையும் வைத்துத்தான் சோதனை செய்ய வேண்டுமா?”, என்றவர் வினவினார்.
பக்காத்தான் ரக்யாட்டின் பொதுவான கொள்கைக் கட்டமைப்பு பிபிஎஸ்எம்ஐ பற்றி விரிவாக விளக்கவில்லை என்றாலும், மலாய்மொழிதான் தேசிய மொழி என்பது உள்பட அரசமைப்பின் முக்கிய பகுதிகளைப் பாதுகாப்பதை அது தனது கடமையாகக் கொண்டிருப்பது தெளிவாக தெரிந்த விசயம்தான்.
“எனவே டிஏபியும் மசீசவும் அரசமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முரண்படாமல் நடந்துகொள்வது அவசியமாகும்”, என்றாரவர்.