‘கல்வி நிதியை வைத்து வாக்குகள் வாங்கவில்லை’- பிஎன் வேட்பாளர்கள் மறுப்பு

uppசரவாக்  தேர்தல்:  ஐக்கிய  மக்கள்  கட்சி(யுபிபி)  முன்னாள்  தலைவர்  வொங்  சூன்  கோ,  தாமும்   மற்றுமிரு  பிஎன்  நேரடி  வேட்பாளர்களும்  டுடோங்,  பெலாவான்,  பாவாங்  அசான்  ஆகிய  பகுதிகளில்  வாக்காளர்களுக்குக்  கையூட்டு கொடுப்பதாகக்  கூறப்படுவதை  மறுத்தார்.

மற்றுமிரு  பிஎன்  வேட்பாளர்கள்   டூடோங்கில்   போட்டியிடும்  தியோங்  தாய்  கிங்கும்  பெலாவான்  வேட்பாளர்  ஜெனட்  லாவும்  ஆவர்.

யுபிபி-இலிருந்து  விலகிய  வொங்  இப்போது  பாவாங்  அசானில்  பிஎன்  நேரடி  வேட்பாளராகக்  களமிறங்குகிறார்.

“நாங்கள்  வாக்காளர்களுக்குப்  பணம்  கொடுக்கிறோம்  என்று  கதை  கட்டியவர்கள்  எதிரணியினரா  அல்லது  பொறுப்பற்ற  மக்களா  என்பது  எனக்குத்  தெரியாது.

“நாங்கள்  பணம்  கொடுப்பதாகக்  கூறப்படுவதை  மறுக்கிறோம்”, என  வொங்  கூறினார்.

சிபுவில்  ஒரு  வாக்குக்கு  ரிம2,000  கொடுக்கப்படுவதாக  டுடோங்கின்  டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர்  யாப்  ஹோய்  லியோங்  கூறியிருப்பது  பற்றி  வொங்  கருத்துரைத்தார்.

குழப்பம்  விளைவிப்பதற்காகவே  அப்படியொரு  வதந்தி  பரப்பப்பட்டிருப்பதாக  அவர்  சாடினார்.

அந்த  வதந்தியை  நம்பி வாக்காளர்கள்  பணம்  கேட்டு  டுடோங்கிலும்  பாவாங்  அசானிலும்   தங்கள்  அலுவலகங்கள்மீது  படையெடுப்பதாக  வொங்  கூறினார்.

தாங்கள்  பெற்றோருக்கு  அவர்களின்  பிள்ளைகளின்  படிப்புக்காக  “கல்வி  நிதி”  கொடுத்தோம்  என்பதுதான்  உண்மை  என்றாரவர்.

“வறிய  நிலையில்  உள்ளோரின்  உதவிக்காக  அமைக்கப்பட்ட  ஒரு  நிதி  அது.  தேர்தலுக்குப்  பின்னரும்  அவர்களுக்கு  உதவி  வழங்கப்படும்”, என  வொங்  கூறினார்.

2015-இல்  அமைக்கப்பட்ட  அந்த  நிதியிலிருந்து  வாரந்தோறும்  பெற்றோருக்கு  உதவிப்பணம்  கொடுக்கப்பட்டு  வருகிறது.

செவ்வாய்க்கிழமை  பெலாவான்  யுபிபி  ஏற்பாடு  செய்திருந்த  ஒரு  நிகழ்வில் 170  குடும்பங்களைச்  சேர்ந்த 320  மாணவர்கள்  அதிலிருந்து  நிதியுதவி  பெற்றார்கள்  என்றாரவர்.

தொடக்கநிலைப்  பள்ளி  மாணாக்கர்களுக்கு ரிம500, இடைநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு  ரிம1,000,  கல்லூரி, பல்கலைக்கழக  மாணவர்களுக்கு   முறையே  ரிம2,000,  ரிம3,000  கொடுக்கப்பட்டது.