அருள்: ‘பெருத்த மோசடி’ நிகழ்திருக்கலாம், ‘எங்கள் தரப்பினரும் உடந்தையாக இருந்திருக்கலாம்’

kanda1எம்டிபி  தலைவர்   அருள்  கந்தா  கந்தசாமி,  அரசுக்குச்  சொந்தமான  அந்நிறுவனத்திலிருந்து   “போலி” Aabar BVI  நிறுவனத்துக்கு  யுஎஸ்$3.5 பில்லியன்  செலுத்தப்பட்ட  விவகாரத்தில்   “பெருத்த  மோசடி”யும் அதற்கு  “எங்கள்  தரப்பினரும்  உடந்தையாக  இருந்திருக்கூடிய” சாத்தியமும்  இருப்பதாகக்  கூறினார்.

”மோசடி……  அதுவும் பெருத்த  மோசடி   நிகழ்ந்திருக்கலாம்  என்பதை  மறுப்பதற்கில்லை……எங்கள்  தரப்பினரும்  அதற்கு  உடந்தையாக  இருந்திருக்கலாம்”, என  அருள்  கந்தா  தி  எட்ஜ்  நிதியியல்  வார இதழுக்கு  வழங்கிய  நேர்காணலில்  தெரிவித்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அபு  டாபி-யைத்  தளமாகக்  கொண்டு செயல்படும்   இண்டர்நேசனல்  பெட்ரோலியம்  இன்வெஸ்ட்மெண்ட்  நிறுவனமும்(ஐபிஐசி)  Aabar  இன்வெஸ்ட்மெண்ட் பிஜேஎஸ் -நிறுவனமும்  தங்களுக்கும்  பிரிட்டிஷ்  வெர்ஜின்  தீவுகளில்   பதிவு  செய்யப்பட்ட  Aabar Investments PJS Limited (Aabar BVI)  நிறுவனத்துக்கும்  எந்தத்  தொடர்புமில்லை  என்று  அண்மையில்  அறிவித்தன.

பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)வும்   1எம்டிபிமீதான  அதன்  அறிக்கையில்    ஆபார்  லிமிடெட்  என்று  அழைக்கப்படும்  Aabar BVI-யுடன்  ஐபிஐசி-க்கோ   Aabar Investments PJS-சுக்கோ  தொடர்புமில்லை  என்றுதான்  குறிப்பிட்டுள்ளது.

1எம்டிபி,  2012-இல், ரிம4.24 பில்லியனை(யுஎஸ்$ 1.367 பில்லியன்) Aabar BVI-இல்  பாதுகாப்பு  வைப்புத்தொகையாக  போட்டு  வைத்துள்ளது.  1எம்டிபி   இயக்குனர்  வாரியத்தின்  ஒப்புதலின்றியே  இது  நடந்துள்ளது.

1எம்டிபியைப்  பிடித்தாட்டும்  பிரச்னைகளுக்குத்  தாம்  காரணம்  அல்ல  என்பதால்  அந்நிறுவனத்தை  விட்டு  விலக  விரும்புவதாகவும்  அருள்  நேர்காணலில் கூறினார்.

அந்நேர்காணல்  குறித்துக்  கருத்துரைத்த  பாஸ்  துணைத்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான்,  மோசடி  நிகழ்ந்திருக்குமானால்  அது  பற்றிய  எல்லாத்  தகவல்களையும்  வெளியிடும்  பொறுப்பு  அருளுக்கு  உண்டு  என்றார்.

அருள்  பதவி  விலகும்  விருப்பத்தை  அடிக்கடி  தெரிவிக்கிறார்  என்பதால்  பதவி  விலகுவதற்குமுன்  எல்லாவற்றையும்  சொல்லிவிட்டுப்  போகட்டும்  என  பாஸ்  வலியுறுத்தியது.

“இம்மர்மத்தை  விடுவிப்பதில்  அருள்  கந்தா  பேங்க்  நெகாரா  ஆளுனர்  ஸெட்டி  அக்தார்  அசீசுடன்  ஒத்துழைப்பது   நன்றாக  இருக்கும்”, என  துவான்  இப்ராகிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.