திரெங்கானு மந்திரி புசார் ரசிப் அப்துல் ரஹ்மான் விவகாரம் தொடர்பில் மாநில ஆட்சியாளர் சுல்தான் மிசான் சைனல் அபிடினைச் சந்திக்கப்போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
அவ்விவகாரம் தொடர்பில் ஊகங்கள் கூறுவதை நிறுத்துமாறு அவர் எல்லாத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டிருப்பதாக பெர்னாமா தெரிவித்தது.
வார இறுதியில் இரண்டு அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மந்திரி புசாரின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவரின் பட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படாததை அடுத்து திரெங்கானு அரண்மனைக்கும் அஹமட் ரசிப்புக்குமிடையில் உறவுகள் சுமூகமாக இல்லை என்று பரவலாகப் பேசப்படுகிறது.
பார்டி அமானா நெகராவுடன் தொடர்புள்ள செய்தித்தளமொன்று அஹமட் ரசிப்மீது திரெங்கானு சுல்தான் அதிருப்தி கொண்டிருக்கிறார் என்றும் அதிருப்தியின் அடையாளமாக அஹ்மட் ரசிப்புக்குக் கொடுக்கப்பட்டிருந்த விருதுகளை எல்லாம் மீட்டுக்கொண்டார் என்றும் கூறியது. இதனால் விரைவில் புதிய மந்திரி புசார் நியமிக்கப்படுவார் என்ற வதந்தி புறப்பட்டிருக்கிறது.
இதனிடையே, நஜிப், திரெங்கானு அரசு எப்போதும்போல் நடந்து வருவதாகக் கூறினார்.
“விரைவில் திரெங்கானு சுல்தானைச் சந்திப்பேன். அதன் பின்னர் அறிக்கை விடுப்பேன்”, என்றாரவர்.