கிட் சியாங்: கந்தா, உண்மையைச் சொல்லி பாவங்களுக்குப் பரிகாரம் காண்பீர்

comecleanarul1எம்டிபியின் தலைவரும் செயல்முறை இயக்குனருமான அருள் கந்தா கந்தசாமி அந்நிருவனத்தின் முறைகேடான நிதி கையாடல்கள் பற்றிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும், அவர் பதவி ஏற்றுக்குக் கொண்டதற்கு முன்பு எடுத்த முடிவுகள் உட்பட, மெய்யானவை என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் அனுதாபத்தை அருள் கந்தா பெறுவதற்கான ஒரே வழி இதுதான் என்று அவர் கூறினார்.

 

அரசுக்குச் சொந்தமான 1எம்டிபியிலிருந்து “போலி” Aabar BVI நிறுவனத்துக்கு யுஎஸ்$3.5 பில்லியன் செலுத்தப்பட்ட விவகாரத்தில் “பெருத்த மோசடி”யும் அதற்கு “எங்கள் தரப்பினரும் (1எம்டிபி) உடந்தையாக இருந்திருக்கூடிய” சாத்தியமும் இருப்பதாக தி எட்ஜ் நிதியியல் வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அருள் கந்தா தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி கருத்துரைக்கையில் கிட் சியாங் இவ்வாறு கூறினார்.

தமக்கு எதுவும் தெரியாது என்று கந்த ஒதுங்கிக்கொள்ள முடியாது என்று கூறிய கிட் சியாங், அனைத்துலக ஊடகங்கள் மற்றும் சரவாக் ரிபோர்ட் ஆகியவை வெளியிட்ட விபரமான தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது குறித்து தெரிந்து கொள்ள கந்தா நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லையா என்று அவர் வினவினார்.

மேலும், 1எம்டிபி விவகாரத்தில் “பெருத்த மோசடி” மற்றும் “உடந்தையாக” இருந்திருப்பது தெரிந்திருந்தும் அவர் அந்நிறுவனத்தின் நேர்மை மற்றும் சிறந்த நிருவாக முறைகளைத் தற்காத்தது ஏன் என்று கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.

சில முடிவுகள் கடந்த ஆண்டு ஜனவரியில் கந்தா பதவி ஏற்பதற்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றை அவர் கடந்த ஓர் ஆண்டுகாலமாகத் தற்காத்து வந்துள்ளார். 1எம்டிபி பற்றிய நாடாளுமன்ற கணக்குக்குழுவின் விசாரணையிலும் அவர் பங்கேற்றுள்ளார் என்பதை கிட் சியாங் சுட்டிக்காட்டினார்.

1எம்டிபி பற்றிய பிஎசியின் அறிக்கை கடந்த ஏப்ரல் 7 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அது பற்றி தெரியுமா என்பதையும், பிஎசியின் தலைவர் ஹசான் அரிப்பின் பிஎசி அறிக்கையின் முக்கியமான ஒரு பத்தியை நீக்கியது பற்றியும் அவருக்குத் தெரியுமா என்பதையும் கந்தா தெரிவிக்க வேண்டும் என்றார் கிட் சியாங்.