சரவாக்கில் பிஎன் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது. சில கணிப்பாளர்கள் முன்பைவிட இத்தேர்தலில் பிஎன்னின் வெற்றி பெரிதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், ஒரு வட்டாரம் பிஎன்னுக்குக் குழிபறிக்கும் வேலைகள் நடப்பதாகக் கூறுகிறது.
82 தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி இடங்களில் பிஎன் வேட்பாளர்களின் வெற்றியைக் கெடுக்க வேலைகள் மும்முரமாக நடக்கின்றனவாம்.
பாரம்பரியமாக சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யுபிபி), சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி (எஸ்பிடிபி) ஆகியவை போட்டியிட்டு வந்த இடங்களில் பிஎன் நேரடி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணம் எனத் தன் பெயரைத் தெரிவிக்க விரும்பாத அவ்வட்டாரம் கூறிற்று.
இவ்வேட்பாளர்கள் பிஎன் தோழமைக் கட்சிகளான ஐக்கிய மக்கள் கட்சி(யுபிபி), பார்டி தெனாகா ரக்யாட் சரவாக் (டெராஸ்) ஆகிய கட்சிகளிலிருந்து விலகி நேரடி வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
அரசியல் வலிமையும் நிதி வலிமையும் கொண்ட இவர்கள் எஸ்யுபிபி, எஸ்பிடிபி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுகிறார்களாம்.
இதனால் மேற்படி கட்சிகள் அவற்றின் உறுப்பினர்களைக் கட்சி்யிலிருந்து விலகச் சொல்லி சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட வைத்துள்ளனவாம்.
நேரடி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் பிறகு அந்த இடங்கள் திரும்ப தங்களுக்குக் கிடைக்காது என்று எஸ்யுபிபி-யும் எஸ்பிடிபி-யும் அஞ்சுவதாக அவ்வட்டாரம் தெரிவித்தது.
முதலமைச்சர் அடினான் சாதேம் களமிறக்கிய 13 நேரடி வேட்பாளர்களும் தத்தம் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களின் போட்டியை அல்லது பல்முனை போட்டிகளை எதிர்நோக்குகின்றனர்.
எஸ்யுபிபி போட்டியிடும் 13 இடங்களில் ஒன்பதில் மற்ற கட்சியினருடன் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
நேரடி வேட்பாளர்களிடையேயும் ஒற்றுமை இல்லையாம். அவர்களும் ஒருவரை ஒருவர் கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனராம். அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் சரவாக்கின் மிகப் பெரிய வெட்டுமர நிறுவனங்கள் இரண்டுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இரண்டுமே பிஎன்னை ஆதரிப்பவைதான். ஆனால், அரசின் குத்தகைகளைப் பெறுவதில் இரண்டுக்குமிடையில் கடுமையான போட்டி நிலவுகிறதாம். அப்போட்டி தேர்தலிலும் பிரதிபலிக்கிறதாம்.
தேர்தல் முடிவுகள் முன்பைவிட பெரும் வித்தியாசமின்றி இருக்கும். மொத்தமுள்ள 82 தொகுதிகளில், BN னுக்கு 70, DAP 9, PKR 2, சுயேச்சை 1. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் சரவாக்கில் இருந்தபோது, எனது ஆய்வில் கிடைக்கப்பெற்ற முடிவுகள் இவை. DAP யும் PKR கட்சியும் கூச்சிங்கில் போடும் சக்களத்தி சண்டை, தீபகற்ப மலேசியாவிலும் ஊடுரவ வாய்ப்பு உண்டு.