“எந்த அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது?”

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள்  பற்றி ஊடகங்களில் சுட்டிக்காட்டியவுடன் தேர்தல் ஆணையம் (இசி) அதில் ‘டக்கென்று’ திருத்தம் செய்வது ஒரு கேள்வியை எழுப்புகிறது; தேர்தல் ஆணையம் தன் விருப்பப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய முடியுமா?

கடந்த இரு வாரங்களாக, பொதுமக்களும் மாற்றரசுக் கட்சியினரும் பல குறைபாடுகள் வாக்காளர் பட்டியலில் காணப்படுவதைச்  சுட்டிக்காட்டியுள்ளனர். , வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு இடங்களில் இருத்தல், ஒரு வாக்காளரின் பெயர் கம்போங் பாரு என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருத்தல், இல்லாத மைகார்ட் எண்களைக் கொண்ட வாக்காளர்கள் என்பன போன்று தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஒரு முறைகேடு சுட்டப்பட்டதும் இசி அடித்துப்பிடித்துக்கொண்டு திருத்தம் செய்ய முனைந்து ஒன்று வாக்காளர் பற்றிய விவரங்களை மாற்றும் அல்லது அவரது பெயரையே அகற்றிவிடும்.

இச்செயல், இதற்குமுன் இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் கூறியிருப்பதற்கு நேர்மாறாக இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் ஒருவரின் விருப்பம்போல் மாற்றம் செய்ய இயலாது என்று வான் அஹ்மட் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இசி தலைவர் அப்துல் அசிஸ் யூசுப் என்ன சொல்கிறார் என்றால், தேசிய பதிவுத்துறையிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு நாளும் ‘துப்புரவு’ செய்யப்படுகிறதாம்.

அப்படி என்றால், எப்படிப்பட்ட சூழலில் தன் ஆணையர்கள் தன்னிச்சையாக திருத்தங்கள் செய்கிறார்கள் என்பதை இசி விளக்க வேண்டும். ஆனால் இதுவரை விளக்கவில்லை.

இவ்விவகாரத்தில் இசி உண்மைநிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தேர்தல் முறைகேடுகள் பலவற்றை அம்பலப்படுத்தியுள்ள ஜோகூர் பாஸ் இளைஞர் சுஹாய்சான் கயாட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“தேர்தல் சட்டப்படி வாக்காளர் பட்டியல் என்பது ஒருவர் வாக்காளரா இல்லையா என்பதைத் தீர்மானிக்க உதவும் ஒரு வலுவான ஆதாரமாகும்”, என்றாரவர்.

அதனால், அதில் உள்ள விவரங்களில் நினைக்கும்போதெல்லாம் மாற்றங்கள் செய்தல் கூடாது என்றவர் வலியுறுத்தினார்.

“வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கான நிலையான நடைமுறைகள் என்ன? இசி இதைத் தெளிவாக விளக்கிட வேண்டும்”, என்றவர் கூறினார். 

இவ்விவகாரம் தொடர்பில் தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே 2.0, இசி-யை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வது பற்றி ஆலோசித்து வருவதாக ஏற்கனவே  கூறியுள்ளது.

கடந்த வாரம் மலேசியாகினியின் நேர்காணலில், பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், வாக்காளர் பற்றிய விவரங்களை இசி தன்னிச்சையாக சேர்ப்பதும் நீக்குவதும் சரிதானா என்று கேள்வி எழுப்பினார். 

“நினைத்தபோதெல்லாம் பெயர்களை மாற்றுவதும் சேர்ப்பதும் விவரங்களைத் திருத்துவதும் சரிதானா என்பது எனக்குத் உறுதியாக தெரியவில்லை. கேட்டால், அலுவலகத் தவறுகளைத் திருத்தம் செய்யும் உரிமை உண்டு என்பார்கள்”, என்றாரவர்.

“ஆனால் அவை அலுவலகத் தவறுகள் அல்ல….அதனால் ஒவ்வொரு நாளும் திருத்தம் செய்து வருவதாகக் கூறுகிறார்களே அதற்கு எந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறதா என்பது தெரிவில்லை”, என்றார் அம்பிகா. அம்பிகா, மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.