இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரித்துவானை தேடிக் கண்டுபிடிக்க ஐஜிபி சிறப்பு பணிப் படையை அமைக்க வேண்டும்

 

 

pixkulaஇந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சா பராமரிப்பு வழக்கில் நேற்று பெடரல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்திரா காந்திக்கும், அவரைப் போன்ற நிலையில் சிக்கியிருக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது.

 

பாராட்டுகள் ஏராளம். ஆனால், உச்ச நீதிமன்றம் இந்திரா காந்தியின் கணவர் ரித்துவானை கைது செய்ய ஐஜிபி காலிட் அபு பாக்காருக்கு பிறப்பித்த உத்தரவு உடனடியாக நிறைவேற்றப்படுமா அல்லது இழுத்தடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் இதற்கு உடனடியான தீர்வை எதிர்பார்க்கிறார்கள் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திரா காந்தியின் வழக்கை நடத்தியவருமான மு. குலசேகரன் கூறுகிறார்.

 

பெடரல் உச்ச நீதிமன்றம் போலீஸ் படைத் தலைவர் காலிட்டுக்கு பிறப்பித்துள்ள உத்தரவை கவனத்தில் கொண்டு, இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை தேடிக் கண்டுபிடித்து கைது செய்வதற்கு ஒரு சிறப்பு போலீஸ் பணிப் படையை அமைக்குமாறு குலசேகரன் ஐஜிபியை கேட்டுக் கொண்டார். மேலும், இச்சிறப்பு பணிப் படை ரித்துவானை கண்டுபிடித்து கைது செய்வதற்கான அதன் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இந்திரா காந்திக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

ரித்துவான் முகமட், பத்மநாதனாக இருக்கையில் அவர் அடிக்கடி தாய்லாந்துக்கு செல்வது உண்டு என்றும், அவருக்கு ஏராளமான நண்பர்களூம் தொடர்புகளும் அங்குள்ளதாகவும் இந்திரா காந்தி தெரிவித்துள்ளார். ஆகவே, இந்திரா காந்தியின் குழந்தையை தாய்லாந்துக்கோ, வேறு இடத்திற்கோ கடத்திச் செல்லப்படக்கூடிய சாத்தியம் குறித்த உண்மையான அச்சம் இருப்பதாக குலா கூறினார்.

 

இச்சூழ்நிலையில், போலீசார் இத்தகவலை கவனத்தில் எடுத்துக் கொண்டு தாய்லாந்து/மலேசிய எல்லையிலுள்ள குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கவனமாகச் செயல்பட கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குலா கூறினார்.