பிரதமரின் உதவியாளர்மீது முகிரிஸ் அவதூறு வழக்கு

muk தம்மீது  அவதூறு  கூறியதாக  முக்ரிஸ்  மகாதிர்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பத்திரிகைச்  செயலாளர்  தெங்கு  சரிபுடின்  தெங்கு  அஹ்மடுக்கு  எதிராக  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  வழக்குப்  பதிவு  செய்தார்.

ஏப்ரல் 15க்கும்  26-க்குமிடையே  தெங்கு  சரிபுடின்  வெளியிட்ட  நான்கு  அறிக்கைகள்  தம்மீது  அவதூறு  கூறுவதாக  முக்ரிஸ்  கூறினார்.

அந்த  அறிக்கைகள் முன்னாள்  கெடா  மந்திரி  புசாரான  முக்ரிஸ்  அவரின் தந்தை  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  மற்றும்  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினுடனும்  சேர்ந்து  சட்டப்படியான  ஒரு  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  சதி  செய்வதாகக்  குற்றம்  சாட்டுகின்றன.

அவ்வறிக்கைகள்  நஜிப்புக்குப்  பதில்  முகைதின்   பிரதமர்  பதவியேற்று பின்னர்   அவர்  தமக்கு  வழிவிட்டு  அப்பதவியிலிருந்து  விலகுவார்  என்ற கருத்தையும்  கொண்டிருப்பதாக  முகிரிஸ்  கூறினார்.

மேலும்,  அவ்வறிக்கைகள்  தாம்  அசிங்கமான  அரசியலில்  ஈடுபடுவதாகவும்   தந்தையின்  விருப்பம்போல்  ஆடுபவர்  என்றும்  கொள்கை  அற்றவர்,  ஒழுக்கமற்றவர்  என்றும்  குறிப்பிடுவதாக  முக்ரிஸ்  நினைக்கிறார்.

தம்மீது  சுமத்திய   அவதூறுகளுக்காக  இழப்பீடு  கோரியிருப்பதுடன்  தெங்கு  சரிபுடின்  இனியும்  அவை  போன்ற  அறிக்கைகளை  வெளியிடத்  தடை  விதிக்க  வேண்டும்  எனவும்  முக்ரிஸ்   நீதிமன்றத்தைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.