கிட் சியாங் அமைச்சரவை கூட்டத்தில் 1எம்டிபி குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறார்

 

Kitemailspmநாளை கூச்சிங்கில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு 1எம்டிபி குறித்து விளக்கம் அளிக்க விரும்பும் தமது நோக்கத்தை டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரதமர் நஜிப்புக்கு இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

ஏன் 1எம்டிபி விவகாரம் குறித்து அமைச்சரை ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதற்கான தமது நிலைப்பாடை விளக்க விரும்புவதாக கிட் சியாங் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், “1எம்டிபி மீதான பெரும் சரவாக் விவாதங்கள்” என்று கிட் சியாங் குறிப்பிட்ட தொடர் வரிசை விவாதங்களில் பங்கேற்குமாறு பிரதமர் நஜிப்புக்கு அவர் சவால் விட்டுள்ளார். இதில் நஜிப் கலந்து கொள்ளலாம் அல்லது அவர் பிரதிநிதிகளை நியமிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள தாம் அனுமதிக்கப்பட்டால், கடந்த ஆறு மாதங்களாக (நாடாளுமன்றம் கிட் சியாங்கை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது) 121 நாடாளுமன்ற தொகுதிகளில் 1எம்டிபி குறித்து மக்களிடமிருந்து சேகரித்த தகவல்களை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப் போவதாக அவர் மேலும் கூறினார்.

1எம்டிபி விவகாரம் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படப்போகும் பொருளாதார விளைவுகள் மலேசியாவை மட்டுமல்ல, சரவாக்கையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்றாரவர். ஆகவே, இது குறித்து அமைச்சரவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறிய கிட் சியாங், பிரதமர் நஜிப்பின் பதிலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.