மகாதிருக்கு போலீஸ் பாதுகாவலர்கள் அகற்றப்பட்டதை ஐஜிபி உறுதிப்படுத்தினார்

outமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  வழங்கப்பட்டு  வந்த  போலீஸ்  வழிக்காவலர்  சேவை  நிறுத்தப்பட்டதை  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  உறுதிப்படுத்தினார்.

இன்று  கோத்தா  கினாபாலுவில்  செய்தியாளர்களிடம்  பேசிய  காலிட்,  முன்னாள்  பிரதமர்  சட்டவிரோத  நிகழ்வுகளில்  கலந்து  கொள்கிறார்  என்றும்  அப்படிப்பட்ட  நிகழ்வுகளுக்கு  போலீஸ்  அதிகாரிகள்  அவருக்குப்  பாதுகாப்பாக  செல்ல  முடியாது  என்றும்  குறிப்பிட்டார்.

“அவர் சட்டவிரோத  நிகழ்வுகளான பெர்சே  பேரணி,  ஜிஎஸ்டி-எதிர்ப்புப்  பேரணி,  குடிமக்கள்  பிரகடனத்தில்  கையெழுத்து  திரட்டும்  இயக்கம்  போன்றவற்றுக்குச்  செல்ல  போலீஸ்  வழிக்காவலர்களைப்  பயன்படுத்திக்  கொள்வதால் அச்சேவையை  மீட்டுக்  கொண்டோம்.

“அவை  போன்ற  நிகழ்வுகளுக்கு  எப்படி  நாங்கள்  அவரை  அழைத்துச்  செல்ல முடியும். அது  முடியாது.  அதனால்  நிறுத்தி  விட்டோம்”, என்றார்.

இது  நிரந்தரம்  அல்ல  என்றும்  அவர்  சொன்னார். தேவையை  ஒட்டி  அது  மறுபரிசீலனை  செய்யப்படலாம்.

போலீஸ்- அல்லாதவர்கள்  அப்படிப்பட்ட  வழிக்காவல்  சேவை  வழங்கக்கூடாது  என்றும்  போலீஸ்  தலைவர்  எச்சரித்தார்.

பயிற்சி  இல்லாதவர்கள் அதைச்  செய்வது  அவர்களுக்கும்  ஆபத்து  மற்ற  சாலைப்  பயனீட்டாளர்களுக்கும்  ஆபத்து  என்றாரவர்.